மிகவும் இருண்டிருந்தால் உன்னால் நட்சத்திரங்களின் ஒளிக்கீற்றைப் பார்க்க முடியும்..
   
  வராகி சித்தர்
  வரலாறு 1
 
நகரங்களில் சிறந்தது காஞ்சி மாநகர் என்பார்கள். அதனினும் சிறந்தது மதுரையம்பதி என்றால், துளியும் மிகைகிடையாது. அதிலும் அபிஷேக பாண்டியனின் காலத்தில் மதுரை நகரம் வடிவிலும் சரி, பொலிவிலும் சரி பூரித்துக் கிடந்தது.
சிறப்பு பெற்ற மதுரை மாநகரின் வீதிகளில் அறிஞர் சங்கங்கள் நிரம்பியிருந்தன.
குதிரை வீரர்களின் உலாக்களுக்கும், சிவிகைகளின் ஊடு நடைக்கும் நடுவே யாராவது இரண்டுபேர் சந்தித்துக் கொண்டால், அவர்கள் பேசிக்கொள்வது கவிதையாகத்தான் இருக்கும். அதில் குற்றம் காண்பதும் பின் அரண்மனை முற்றம் ஏகுவதும் சாதாரணமாக நடக்கும்.தமிழ், திருநடனமாடிய நாட்கள் அவை.
ஆயினும் மனித சக்தியின் புதுப்புது பரிமாணங்கள் பற்றி பெரிய ஞானம் யாருக்கும் இல்லை என்றே கூறவேண்டும்.
சோமசுந்தரர் ஆலயம் ஏகுபவர்கள் கூட, இறைவனை ஒரு நிகரில்லாத சக்தியாகக் கருதி பொன் கேட்டார்கள், பொருள் கேட்டார்கள். ஒருவர்கூட நிகரில்லாத ஞானத்தைக் கேட்கவில்லை... கேட்கத் தெரியவில்லை.
இவர்களுக்கெல்லாம் வழிகாட்டுவதற்கென்றே இறைவனும் சோமசுந்தரனாய் ஒரு கட்டிளம் காளை வடிவில் மதுரையம்பதிக்குள் ஒருநாள் நுழைந்தான்.
அவன் திருக்கோலத்தை மதுரைக் கலம்பகம் தொட்டு பரஞ்சோதியடிகளின் கண் வழிக்காண்போமா?
‘விபூதிப் பந்தலிட்ட நெற்றி, மையத்தில் குங்குமத் திலகம். உச்சியில் வட்டமிட்டு வளைத்துக் கட்டிய சிகை, செவிப்புலத்திலோ கனக குண்டலங்கள், கழுத்தில் ஸ்படிக மாலை, அதன் மையத்தில் ஓர் உருத்திராட்சம். பரந்துவிரிந்த மார்பு, அதில் பளீரென்ற பூணூல்.
சிவபெருமானே நேரில் வந்து விட்டிருக்கிறான் என்பதன் சான்றாய் புலித்தோல் ஆடை, பொற்சிலம்பு, பாதங்களில் நாகமரக்குறடுகள்.... நடந்து வரும் விதத்திலோ சொல்லமுடியாத அளவு நளினசிங்காரம்! மதுரை மாநகரமே அவர் மேல் வைத்த பார்வையை எடுக்க முடியாமல் திணறியது.
தேஜஸ் என்னும் சொல்லுக்கு பொருள் கூறுவது போல உலவிய அச்சுந்தரனைப் பார்த்த பலரில் சிலர், தம்மை மறந்து கைகளைக் கூப்பி வணங்கவும் செய்தனர்.
பதிலுக்கு அவர்களை சுந்தரர் ஆசிர்வதிக்க, கூப்பிய அவர்களின் கரங்களுக்குள்ளே ஒரு பொன் நாணயம்! கையை அவர்கள் விலக்கியபோது அந்த நாணயம் கீழே விழுந்து உருண்டு ஓடியது.
உருண்டு ஓடியது நாணயம் மட்டுமல்ல...
சுந்தரர் பற்றிய செய்தியும்தான்...
பெருநோய் பிடித்து வாடிய பெரும்புலவர் ஒருவர், அந்த சுந்தரனின் பார்வை பட்டு பரிசுத்தமடைந்து மகிழ்ந்தார், நோய்நீங்கி.
நகர் முழுக்க அவரைப் பற்றியே பேச்சாயிருந்தது.
‘‘ஊர் முழுக்க ஒரு சுந்தர புருஷன் பற்றி பேச்சாக இருக்கிறதே... நீ அவரைப் பார்த்தாயோ?’’
‘‘நீ தவறாகச் சொல்கிறாய். அவர் பார்ப்பதற்கு உரியவர் அல்லர்... தரிசிக்க வேண்டியவர். அவர், மகான்களையும் முனிவர்களையும்விட மகிமைமிக்கவர்!’’
‘‘இவர் அப்படி என்ன செய்தார்?’’
‘‘அப்படிக் கேள். கன்னம் கரிய நிறமுடன் பார்க்கவும் கோரமான தோற்றமாக இருந்த ஒரு பெண்ணை, ஒரு சிட்டிகை விபூதி பூசி பொன்னிறத்தவளாக, மலர்ந்த ஒரு மலர் போல மாற்றிவிட்டாரே... இதை என்னென்று சொல்வது?’’
‘‘நீ சொல்வதைப் பார்த்தால் இவரால் செய்ய முடியாததே எதுவும் இல்லை போல் தெரிகிறதே?..’’
‘‘அதுதான் சத்யமான உண்மை.’’
எங்கும் இப்படிப்பட்ட உரையாடல்கள் நிகழ்ந்தன. அறிஞர் சங்கமோ குழம்பிப் போயிருந்தது. தொண்ணூறு வயதை நெருங்கி விட்ட பெரும்புலவர் வாக்கோடனார் என்பவர். கல்மண்டபம் ஒன்றில் வீற்றிருந்த அவரைச் சுற்றி, பெரிய புலவர் கூட்டமும் சிந்தனையாளர் கூட்டமும் திரண்டிருந்தது.
‘‘வாக்கோடனாரே... இப்படியே அந்த சுந்தரபுருஷனைப் பற்றி குழம்புவதை விடவும் அவருடன் நேருக்கு நேர் பேசிப் பார்த்து விடுவதே எனக்கு உத்தமமாகப் படுகிறது’’ என்று அந்தக் கூட்டத்தில் ஒருவர் கூறிய மறுநொடியே அங்கே பிரசன்னமாகிறது அந்த சுந்தரபுருஷனின் உருவம்.
‘‘அனைவருக்கும் என் ஆசிகள்... சதா என் நினைவாகவே நீங்களெல்லோரும் இருக்கிறீர்கள் என்பது உங்களைப் பார்க்கையில் புலனாகிறது.
உங்கள் எண்ணத்தின் சக்தி என்னை இங்கே இழுத்து வந்துவிட்டது. உங்களில் யாருக்கு என்ன ஐயப்பாடு...? எதுவாயினும் வினவுங்கள். பதில் தருகிறேன்.’’
அங்கே பலருக்கு கேள்வி கேட்பது என்றால் கொள்ளைப் பிரியம். அதிலும் எகணைக்கு மொகணை கேள்வி கேட்பதில் அங்கே சிலர் மிகப்பிரசித்தம். அவர்களெல்லாம் தொடை தட்டிக் கொண்டு தயாராகி விட்டனர்.
‘‘உங்கள் பெயர்?’’
‘‘என் உருவத்துக்கு ஏற்ற பெயர்தான்... சுந்தரன். எப்பொழுதும் ஆனந்தமாகவும் இருப்பவன் என்பதால் சுந்தரானந்தனாகி விட்டேன்..’’
‘‘உங்கள் ஊர்?’’
‘‘இந்த உலகமே எனக்கு ஒரு ஊர்தான்.’’
‘‘அதுசரி... அதில் நீங்கள் ஜென்மம் கண்டது எங்கே என்பதுதான் கேள்வி...’’
‘‘எனது ஊரைச் சொன்னால், அது உங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும் அல்லவா?’’
‘‘முதலில் ஊரைக் கூறுங்கள். பிறகு தெரிந்திருக்கிறதா இல்லையா என்று நாங்கள் கூறுகிறோம்.’’
‘‘நான் கூறிய பிறகு, அப்படி ஓர் ஊரை கேள்வியேபட்டதில்லை என்று கூறிவிடக் கூடாது.’’
‘‘கேள்விப்பட்டிருக்கவில்லை என்றால் அப்படித்தானே கூற முடியும்?’’
‘‘இது ஒருவகையில் சரியான பதில்தான். அதேசமயம், அறியாதவைகளே இம் மண்ணுலகில் அதிகம் என்பதுதான் உண்மை. இதை அறிந்தவர்கள் கேள்வி கேட்கமாட்டார்கள்... மௌனமாகப் புரிந்து கொள்ளவே முயல்வார்கள்.’’
‘‘அது, விஷயத்தைப் பொறுத்தது. உம் வரையில் மௌனமாக இருந்து எதைப் புரிந்து கொள்ளமுடியும்?’’
‘‘மௌனத்தில் விளங்காததா கேள்விகளால் விளங்கி விடப்போகிறது?
ஓர் அளவு வரை, விடைகளை மௌனமாக பரிசீலியுங்கள். அப்பொழுதுதான் சித்தம் விளங்கும்.’’
‘‘சித்தமா...! சித்தம் என்று தாங்கள் எதைக் கூறுகிறீர்கள்?’’
‘‘சித்தம் என்பது ஒரு புதிய சொல்லா என்ன?’’
‘‘சித் என்றால் அறிவு... சித்தம் என்பது அறிவு நிலை. அதை குறிப்பிடுகிறீர்களோ?..’’
‘‘நெருங்கி வந்து விட்டீர்கள். ‘சித்’ என்றால், அறிவது. ‘சித்தம்’ என்றாலோ அறிந்தது, அறிந்து கொண்டிருப்பது, அறிய வேண்டியது என்ற மூன்று தளங்களிலும் இருப்பது. என்னுள் அது இருப்பதால், நானொரு சித்தன் என்றால் அது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகின்றேன்.’’
சுந்தரானந்தரின் பதிலைத் தொடர்ந்து, முதல்முறையாக அந்த அறிஞர் கூட்டமே ஆழ்ந்த மௌனம் கொள்கிறது. உள்ளுக்குள்ளோ அவர் கூறியது போல பரிசீலனை.
முதல்முறையாக ‘சித்தன்’ என்கிற காரணப் பெயரைக் கேட்ட ஆச்சரிய அதிர்ச்சியும் அவர்களிடம் பரவி நிற்கிறது.
‘‘இப்படி மௌனமாக இருப்பதில் இருந்து, ஒரு மாயாவியாகக் கருதிய என்னை, சித்தனாக ஏற்பது எப்படி என்று நீங்களெல்லோரும் யோசிப்பது புரிகிறது...’’
‘‘உண்மைதான்... முனிவனை அறிவோம், புலவனை அறிவோம்.. தபசிகள், மகான்கள், ரிஷிகள் என்று பல பதங்களில் மனித அறிவின் விலாசங்களை அறிவோம். ‘சித்தன்’ என்று ஒன்றை அறிவது இதுவே முதல்முறை.
புதிய சொல்... புதிய பொருள்’’
‘‘எதுவும் இந்த உலகில் புதியதில்லை அறிஞர்களே! இல்லாத ஒன்றை எந்த நாளிலும் நீங்கள் கண்டறிய முடியாது. இருக்கின்ற ஒன்றை முதன்முதலில் அறியும்போது அது புதியதாக சித்தத்துக்கு தோன்றும். பின் அது பழையதாகிவிடும்...’’
‘உண்மைதான்... நீங்கள் புரியும் மாயசாகசங்கள் கூட அப்படித்தானோ?’’
‘‘எது மாய சாகஸம்...? முதலில் அதைக் கூறுங்கள்.’’
‘‘நீங்கள் கைதட்டி அழைத்தால் ஜடப்பொருளான மேகம் கூட உங்களை நோக்கி நீந்தி வருகிறதே... இது மாயமில்லாமல் வேறு என்ன?’’
‘‘எந்த விஷயத்தையும் ஒரே கோணத்தில் நீங்கள் பார்க்கிறீர்கள் என்பது புரிகிறது. மேகம் என் அருகே வரவில்லை. அது வரவும் வராது. நானும் நாமும்தான் அதன் அருகே சென்றோம்...’’
‘‘ஆச்சரியமான பதில் இது... எப்படி என்று கூறமுடியுமா?’’
‘‘சிந்தியுங்கள்... சிந்திக்கத்தானே சித்தம் உள்ளது. சிந்திக்க சிந்திக்க எல்லாம் விளங்கும்?’’
‘‘அதுசரி... பெருநோய் பிடித்த ஒருவர், பரிபூரண குணம் பெற்றாரே அது எப்படி?’’
‘‘பஞ்ச பூதங்களால் ஆனதுதானே இந்த உடல்? பஞ்சபூதச்சிதைவுதான் பெருநோய். அந்த சிதைவை சரிசெய்தேன். அவர் மேனியும் சீராகிவிட்டது? அவ்வளவுதான்..
முதலில் உங்களை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். அப்பொழுது என்னையும் உணர்ந்து கொள்வீர்கள். அந்த நொடி, இது தெரியாமல் இவ்வளவு நாட்கள் இருந்துவிட்டோமே... என்று ஒரு வருத்தம் உங்களுக்குள் ஏற்படும். அது சிரிப்பாக வெளிப்படும்.
மனித சக்திக்கு ஓர் எல்லை உண்டு என்கிற உங்கள் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். உங்களுக்குள் உங்களைத் தோண்டுங்கள். அப்படியே காலத்தால் வாழ்வதை உத்தேசித்து கால நேரச் சிந்தனைகளையும் பட்டை தீட்டுங்கள்.
உங்களுக்கு சில விஷயங்களை மட்டும் உரைப்பேன். உங்கள் வாழ்நாட்கள் இத்தனை வருடங்கள், இத்தனை நாட்கள் என்பதில் இல்லை. எவ்வளவு மூச்சு என்பதில்தான் உள்ளது.
சொல்லப் போனால் மூச்சுக்காற்றில்தான் எல்லாமே உள்ளது.’’
‘‘மூச்சுக்காற்றிலா...?’’
‘‘ஆம்... முதலில் மூச்சு... பின் பேச்சு. அதாவது உள் பேச்சு...’’
‘‘உள்பேச்சா... அதாவது மனதிற்குள் பேசிக் கொள்வதா?’’
‘‘அப்படியும் கூறலாம். மனதிற்குள் பேசிக் கொள்ளும்போதுதான் மனதின் திறம் தெரியவரும். மனத்திறத்தில் இருக்கிறது மற்ற விஷயங்கள். அதாவது மந்திரத்தில் என்றும் கூறலாம்...’’
‘‘மந்திரத்திலா...?’’
‘‘ஆம்...’’
‘‘மூச்சு... மந்திரம்.. எல்லாம் என்ன? ஒன்றும் புரியவில்லை எங்களுக்கு...’’
‘‘விதைகளைத் தூவி விட்டேன்.. நான் கூறியதை வைத்துக்கொண்டு அலசுங்கள். ஆராயுங்கள்... மெல்லமெல்ல விளங்கும்.’’
 
  Today, there have been 11 visitors (19 hits) on this page! View Full Moon Day Time table  
 
மனதைத் திறந்து வைத்திரு. நீ அறிந்ததைவிட பெரிய விடயம் ஒன்று இங்கு நடந்துகொண்டிருக்கிறது This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free