மிகவும் இருண்டிருந்தால் உன்னால் நட்சத்திரங்களின் ஒளிக்கீற்றைப் பார்க்க முடியும்..
   
  வராகி சித்தர்
  காளாங்கி நாதர்
 
காலாங்கி நாதர். இந்தப் பெயருக்குக்கூட, ஒன்றுக்கு மேற்பட்ட விளக்கங்கள் உண்டு.
அங்கி என்றால் ஆடை என்றும் அணிவது என்றும் பொருள். காலாங்கி என்றால் காலத்தையே ஆடையாக அணிந்தவர் என்பார்கள். இல்லையில்லை, அவர் காலாங்கி நாதர் இல்லை. காளாங்கி நாதர்... அதாவது காளம் என்றால் கடுமையானது என்று பொருள். அப்படிப்பட்ட கரிய நிறத்தையே ஆடை போல உடம்பு முழுக்க பெற்றவர் என்றும் கூறுவர் சிலர்.
இதுவும் பிழை... எப்பொழுது ஒருவர் நாதர் என்று தன்னை குறிப்பிடுகிறாரோ, அப்போது அவர் ஒரு குறிப்பிட்ட இறை அம்சத்துக்கோ இல்லை தன்னைக் கவர்ந்த அம்சத்துக்கோ தன்னை இனியவராகவும் அடிமையாகவும் ஆக்கிக் கொண்டவர். அப்படிப் பார்த்தால் காளாங்கி எனப்படும் சிவாம்சத்துக்குத் தன்னை அடிமையாக்கிக் கொண்டு காளாங்கி நாதரானவர் அவர் என்பார்கள்.
உண்மையில், அவர் பெயர்க்காரணம் துல்லியமாக விளங்கவில்லை. தனது பெயர்க் காரணம் பற்றி எங்கும் அவர் கூறவில்லை.
காளாங்கி நாதர், தனக்கான ஜீவன் விடுதலை குறித்துதான் பெரிதும் சிந்தித்தார்.
ஊரையும் உலகையும் வழிப்படுத்த வேண்டும். அதற்கே நமக்கு இந்த ஜென்மம் என்றெல்லாம் அவர் எண்ணவே இல்லை.
ஒவ்வொரு தனிமனிதனும் தன்னை கடைத்தேற்றிக் கொண்டாலே போதும்; சமுதாயம் தானாக மாறிவிடும் என்பதற்கு ஒரு முன் உதாரணம் போலவும் காலாங்கிநாதர் விளங்குகிறார் எனலாம்.
இவரது குருநாதர், திருமூலர்.
சீடனை பல விஷயங்களில் கடைத்தேற்றியவர்.
காலாங்கிநாதர், பேச்சைவிட கேட்டல் பெரிதென்று எண்ணியிருந்தார்.
எனவே அவர் பற்பல சித்தர்களது உபதேசங்களைத் தேடி அலைந்தார். பலரது உபதேசங்கள் அவரைத் தேடியே வந்தன.
இப்படித்தான் ஒருமுறை, பூமியில் பிரளயம் ஏற்பட்டது. நிலப்பரப்பு முற்றும் நீரால் சூழ்ந்தது. மலைமுகடுகள் மட்டும் தப்பித்தன. மலை முகடுகளில் தான் சித்த புருஷர்களும் வசித்து வந்தனர். அவர்களை சந்திக்கும் பாக்கியம், பிரளயத்தால் காலாங்கிநாதருக்கு கிட்டியது.
அதற்கு முன்பே காலாங்கிநாதர் காயகற்பங்கள் தயாரிப்பதில் நிபுணராக விளங்கினார். அதேபோல குளிகைகள் செய்வதிலும் வல்லவராக இருந்தார். உயிருள்ள அனைத்தும் உள்வெளித் தொடர்பு இயக்கத்தால் ஒரு நிலையில் இருக்காது. அதை நடுநிலைப்படுத்திவிட்டால் நீராக இருந்தால் மிதக்கலாம். காற்றாக இருந்தால் பறக்கலாம். உயிருள்ள மனிதன், சுவாசச் செயல்பாடு காரணமாக சதா புறத் தொடர்புடன் இருக்கிறான். இறந்தபின் அந்தத் தொடர்பு அற்று விடுகிறது. இதனால், எத்தனை திடமானதாக அவன் உடல் இருந்தாலும், மிதக்கிறது. அதற்கு முன்வரை திடமற்றதாகவே இருந்தாலும் மூழ்கித்தான் போகிறது.
பறவைகள் பறப்பதன் பின்னணியிலும் இப்படி ஒரு நிலைப்பாடு இருந்து, அதுவே பறக்கத் துணை செய்கிறது. நுட்பமான சிந்தனைகளால் இவைகளை அறிந்த காலாங்கி நாதர், குளிகைகளை தயாரித்து அதை வாயில் போட்டுக் கொள்வதன் மூலம் புறத்தில் மூச்சடக்கி, அகத்துக்குள் குளிகை மூலமாகவே பிராண சக்தியைத் தந்து, உடம்பை புறத்தில் இருந்து பிரித்து, மிதத்தல் பறத்தல் போன்ற செயல்பாடுகளை சாதாரணமாக செய்பவராக விளங்கினார்.
அவரது குளிகைகளும் காற்றுக்குச் சமமான பிராண சக்தியை அளிப்பதாக இருந்தன. இதனால், சித்தர்கள் பலர் காலாங்கிநாதரை ஒரு விஞ்ஞானியாகவே பார்த்து வியந்தனர்.
பிரளய சமயத்தில், மலை உச்சியில் இருந்த சித்தர்கள், காலாங்கிநாதரின் குளிகை ஞானத்தை அவர் வாயாலேயே கேட்டும் அறிந்தனர். அப்போது, ‘தானறியும் அனைத்தும் பிறர்க்குக் கொடுக்கவே’ என்கிற ஒரு தர்ம உணர்வை அவருக்குள் விதைத்தனர்.
‘‘நீ அறிந்ததெல்லாமும் கூட பிறர் கொடுத்த ஞானத்தால்தானே?’’ என்று கேட்டு, அவரைக் கிளறிவிட்டனர்.
அப்படியே மலைத் தலங்கள் ஏன் சித்தர்கள் வாழக் காரணமாகிறது என்பதையும் விளக்கினார்.
‘பூமியில், தட்டையான நிலப்பரப்பில் திக்குகள் தெளிவாகத் தோன்றி ஒன்பது கிரக சக்திகளும் அந்த நிலப்பரப்பில் தங்களுக்குரிய பாகங்களில் நிலைபெற்ற பிறகே, அந்த மண்ணை, பின் அந்த மண்ணுக்குரியவனை ஆட்சி செய்கின்றன.
மலையகத்தில் இப்படித் தட்டையான நிலப்பரப்பு இல்லை. மலை என்றாலே கூர்மையானது என்றும் ஒருபொருள் உண்டு. காற்று கூட இங்கே குளிர்ந்து விடுகிறது. இயக்க சக்தியான வெப்பமும் முழுத் திறனோடு இருப்பதில்லை. நீரும் நிலை பெறுவதில்லை... எவ்வளவு மழை பெய்தாலும் கீழே ஓடி விடுகிறது.
மொத்தத்தில், பஞ்ச பூதங்கள் இங்கே தங்கள் இயல்புக்கு மாறாகவே விளங்குகின்றன. அடுத்து, கிரகங்கள் காலூன்றி அமர்ந்து சக்தி கொள்ள, சரிவான பரப்பில் இடமில்லை. இதனால், உலகப்பற்றை கைவிட்டு பஞ்ச பூத சக்திகளின் அதிவலுவான பிடியில் இருந்து தப்பித்து, தன் இச்சைப்படி சுதந்திரமாக செயல்பட, மலையகங்கள் துணை செய்வதை, ஓர் உபதேசமாகவே காலாங்கிநாதர் பெற்றார்.
எனவேதான் சிங்கம், புலி போன்ற வலிய மிருகங்கள் கானகத்தை, குறிப்பாக மலைக் கானகத்தை வலிமையானதாகக் கருதுகின்றன. தங்களுக்கு அங்கே பாதுகாப்பு இருப்பதாகவும் எண்ணுகின்றன.
மலைச் சிறப்பை உணர்ந்த காலாங்கிநாதர், அங்கே புலிவடிவில் திரிந்த சித்தர் ஒருவரை இனம் கண்டு கொண்டார்.
ஒரு தவசி, மான் தோலில் அமர்ந்து தவம் செய்கிறார் என்றால், அவர் புலிபோல ஒரு சக்திக்குள் அடங்கி மோட்சம் பெற எண்ணுகிறார் என்பது நுட்பப் பொருள். அதே சமயம், புலித்தோல்மேல் அமர்ந்து ஒருவர் தவம் செய்தால், மற்ற அனைத்தையும் அடக்கி அவர் மோட்சம் செல்லத் தயாராகிறார் என்பதே நுட்பமான உட்பொருளாகும். பிற காரணங்கள், காலத்தால் பலரது எண்ண நுட்பங்களால் உருவானவைகளாக இருக்கலாம்.
காலாங்கி நாதரும், அடக்கி ஆளும் புலியானது அடங்கிய நிலையில் சாதுவாக இருப்பதை முதலில் உணர்ந்தார். அந்த மாறுபட்ட இயல்பை வைத்தே, அவர், அந்தப் புலி, தோற்றத்தில் தான் புலி; அதன் உயிர் அம்சம் வேறாக இருக்கலாம் என்பதை அறிந்து, துணிந்து அதன் முன்சென்று நின்றார்.
அந்தத் துணிவைக் கண்ட புலியும் சித்த புருஷராகத் தோன்றி, காலாங்கிநாதரின் பட்டறிவைப் பாராட்டினார்.
வாழ்வில் பல உண்மைகள் இப்படித்தான், இயல்புக்கு மாறுபட்ட இடத்தில், சில காரணங்களுக்காக ஒளிந்துள்ளன. அவைகளை கண்டறியத் தெரிந்தவனே ஞானி என்று உபதேசித்தார்.
அவர் கருத்து, காலாங்கி நாதரை புடம் போட்டது. இந்த உலக வாழ்க்கையை ஒருவார்த்தையில் கூறுவதானால், ‘மாயை’ என்பார்கள்.
மாயை என்றால், ‘இருந்தும் இல்லாமல் இருப்பது’ என்பதே பொருள். அடுத்து, நிலைப்பாடுகளில் மாறிக் கொண்டே இருக்கும். கடலோரமாய் அலைகள் எழும்புகின்றன. அந்த அலையின் ஒரு பாகம் உயர்ந்திருக்கும். மறுபாகம் தாழ்ந்திருக்கும். அதே மறுபாகம் அடுத்து உயர, உயர்ந்த பாகம் தாழும் இதில் உயர்வு தாழ்வை பார்க்கவே முடியாது. இரண்டும் சேர்ந்ததே அலை! அந்த அலையை உருவாக்கும் நீண்ட கடல் வெளியோ எந்த உயர்வு தாழ்வும் இன்றி சமனமாக நீண்டிருக்கும்.
எங்கே நிலமானது நீரை விட உயர்ந்து செல்ல எண்ணுகிறதோ, அங்கே அந்த விளிம்பில், ஓர் அலை பாயும் தன்மை ஏற்பட்டு விடுகிறது.
ஆன்மாவும் வாழ்வில் மூழ்கிய இடத்தில் இருந்து உயர்ந்து எழுந்து, மூழ்கியதை தவிர்க்க நினைக்கும் போது அங்கே ஒரு பெரும் போராட்டம் எழுகிறது. ஒரு வகையில் அந்தப் போராட்டம்தான், இயக்கம். அங்கே இருக்கும்வரை இயக்கம்தான். அங்கிருந்து நீருக்குள்ளோ, நிலத்துக்குள்ளோ நாம்போய் விட்டால், அங்கே போராட்டம் இல்லை. அலைகடல் நமக்கு மறைமுகமாக போதிக்கும் பாடம் இது. சிந்திக்க சிந்திக்க இதுபோல வாழ்க்கை அம்சங்களில் நுட்பமான உட்பொருள் பொதிந்து கிடப்பதைதான் புலியாய் இருந்த சித்தரும், காலாங்கி நாதருக்கு விளங்க வைத்தார்.
அது, அவரது அகக் கண்களை நன்றாகவே திறந்துவிட்டது. பேசாமல் இருப்பதையும் கேட்பதையே பெரிதாகவும் கருதியவர், பின்னர், தான் அறிந்ததை பலருக்கும் உபதேசிக்கலானார். இவரால் பலர், நான் யார்? என்கிற கேள்வியில் விழுந்தனர்.
காலாங்கிநாதரோ நுட்பமான உட்பொருளை விளங்கிக் கொள்வதிலேயே குறியாக இருந்தார்.
ஒரு மரமானது இரை தேடி எங்கும் செல்வதில்லை.
அது இருக்கும் இடத்திலேயே, அதற்கு உணவை பஞ்ச பூதங்கள் மூலம் இறைவன் தந்துவிடுகிறான். அதுவும், நின்ற இடத்திலேயே, காய் கனிகளை பதிலுக்கு வழங்குகிறது.
சித்தனும் எங்கும் அலையத் தேவையில்லை.
அமர்ந்த இடத்தில் அவன் தனக்கான உணவை, காற்று _ அதில் உள்ள நீர் _ தன் மேல் படும் ஒளி _ அதன் உஷ்ணம் மூலம் பெற முடியும் என்று நுட்பமாய் உணர்ந்தார்.
இதனால், பல நூறாண்டுகள் அமர்ந்த இடத்தில் தவம் செய்வது என்பது இவரது வாடிக்கையாகி விட்டது. திருமூலரே, இப்படி அமர்வதில் உள்ள சிறப்பு, நடப்பதிலும் உள்ளது என்பதை இவருக்குப் புரியவைத்தவர். அதன்பிறகே இவர் தேச சஞ்சாரியானார். அந்த சஞ்சாரங்களில், ஆமைக்குள் அடங்கிக் கிடந்த சித்தர் முதல், பட்சி ரூபமாய் திரிந்த சித்த புருஷர் வரை பலரை தரிசனம் செய்தார். அவர்கள் எதனால் மானிட உருவம் விட்டு அதுபோன்ற உயிர்களாக வடிவம் கொண்டார்கள் என்பதையும் அறிந்தார். இப்படி அவர் தரிசித்தவர்கள் பலர். அவர்கள், தசாவதார சித்தர்கள் ஆவர்.
திருமாலின் தசாவதார அம்சங்களிலேயே சித்த மூர்த்திகள், அந்த அவதார நோக்கங்களையே தத்துவமாகக் கொண்டு திகழ்ந்தனர். அவர்களையெல்லாம் தரிசனம் செய்தார்.
அதேபோல, அஷ்டமாசித்திகளை தங்களுக்குள் அடக்கிக்கொண்ட பல சித்தர்களை தரிசனம் செய்தார். அஷ்டமாசித்து எட்டும், தங்களின் பிரதி பிம்பத்துடன் கூடிப் பெருகியே 8 ஜ் 8=64 என்கிற கலைகள் ஆனது.
இந்தக் கலைகளை நோக்கினால், அவைகளில் அஷ்டமாசித்து ஒளிந்திருக்கும். இந்தக் கலைகளும் தங்களின் பிரதி பிம்பங்களால் அணு அணுவாகச் சிதறி அறுபத்து நான்கு கோடியாயிற்று.
இது சப்த லோகங்களில் பரவியதால், நானூற்று நாற்பத்தியெட்டுக் கோடியாயிற்று. இதில் ஒன்றைத்தான் கோடானு கோடி மனிதர்களாகிய நாம் நமக்கெனப் பெற்றுள்ளோம்.
ஒருவருக்கு தமிழாற்றல், ஒருவரிடம் எழுத்தாற்றல், ஒருவரிடம் பேச்சாற்றல் என்று அந்தக் கோடிகளின் தெரிப்புதான் நம் உயிரணுவுக்குள் புதைந்து நமக்கான வலிமையாக வெளிப்பட்டு நம்மை வழிநடத்துகிறது.
நமக்குள் இருக்கும் ஓர் அணுவுக்கே நம் வாழ்வை ஒளிப்படுத்தும் ஆற்றல் உண்டென்றால், இவை அனைத்தையும் உள்ளடக்கிய அந்த நானூற்று நாற்பத்தியெட்டுக் கோடியின் மூலமான அஷ்டமா சக்திக்கு எவ்வளவு சக்தி இருக்கும்!
கற்பனை செய்யும் சக்தி கூட நமது மூளைக்குக் கிடையாது. ஆனால், காலாங்கிநாதர் இப்படிப் பல நுட்பங்களை விளங்கிக் கொண்டவர். இறுதியாக, நகரங்களுள் சிறந்த காஞ்சியம்பதியில் அடங்கினார் என்பர்
 
  Today, there have been 3 visitors (3 hits) on this page! View Full Moon Day Time table  
 
மனதைத் திறந்து வைத்திரு. நீ அறிந்ததைவிட பெரிய விடயம் ஒன்று இங்கு நடந்துகொண்டிருக்கிறது This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free