மிகவும் இருண்டிருந்தால் உன்னால் நட்சத்திரங்களின் ஒளிக்கீற்றைப் பார்க்க முடியும்..
   
  வராகி சித்தர்
  சிவவாக்கியர்
 
பதினெட்டு சித்தர்களுமே ஒருவருக்கொருவர் மிகவும் வித்தியாசப்பட்டவர்கள். உலக மாயையை ஒவ்வொரு விதமாக தெளிந்தவர்கள்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அனுபவம். சிவவாக்கியரின் அனுபவம் இதில் மிக விசேஷமானது.
சிவவாக்கியரின் தாய் கருவுற்றிருந்த காலத்தில் சதாசர்வ காலமும் சிவநாமத்தை ஜபித்தபடி இருந்தாளாம்.
அதன் எதிரொலி, அந்தப் பஞ்சாட்சரமே உருத்திரண்டு மனிதப் பிறவியெடுத்தது போல பிறந்தவர்தான் சிவவாக்கியர்.
எல்லாக் குழந்தைகளுமே பிறந்தால் அழும். அதன் மொழியும் ‘குவா.... குவா’ என்றுதான் இருக்கும். ஆனால் சிவவாக்கியர் மட்டும் பிறந்த நொடியே ‘சிவா... சிவா’ என்றாராம்.
‘இதென்ன இக்குழந்தை வாயில் சிவவாக்கியம்?’ என்று கேட்டு வியந்த இவரது பெற்றோர், நாமகரணத்தின் போது ‘சிவவாக்கியன்’ என்றே பெயர் சூட்டிவிட்டனர்.
சிவா சிவா என்று அழுதபடியே பிறந்த சிவவாக்கியர், பிறக்கும் போதே தன் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதையும் பெற்றோருக்கு கோடு காட்டிவிட்டார்.
‘இது சிவனின் பிள்ளை... எல்லோரையும் போல, வெந்ததைத் தின்றுவிட்டு வேளை வந்தால் சாகின்ற பிறவி அல்ல’ என்று அவர்களும் முடிவு செய்து விட்டார்கள்.
சிவவாக்கியர் வாழ்க்கையும் ஒரு யோகியின் வாழ்க்கை போலத்தான் இருந்தது. வாழ்க்கை என்பது எப்பொழுதும் ஒன்றுபோலவே போய்விடுவதில்லையே....?
சீரிய சிவநெறிச் செல்வராய் சிவவாக்கியர் விளங்குவதைக் கண்ட சான்றோர் சிலர் அவரிடம், ‘அப்பனே, நீ காசிக்குச் சென்று வருதல் உனக்கு மேலான நலன்களைத் தரும். கங்கை நீராடலும் உனக்குள் உள்ள கர்மவினைகளை நேராக்கும்’ என்று கூறிட, சிவவாக்கியரும் காசியம்பதிக்குக் கிளம்பிவிட்டார்.
காசியம்பதியும் சிவவாக்கியரை இருகரம் நீட்டி வரவேற்றது. விஸ்வநாதர்_விசாலாட்சி தரிசனமும் கங்கை நீராடலும் முடிந்த நிலையில் கங்கைக்கரை ஓரமாக நடந்தபடி இருந்தார்.
அங்கே ஒரு செல்வந்தர் அன்னதானம் செய்தபடி இருக்க, சிவவாக்கியருக்கும் பசித்ததால், வரிசையில் போய் நின்றார். இவருக்கும் அன்னம் அளிக்கப்பட்டது. அந்த அன்னத்தோடு ஒரு மரத்தடிக்குப் போய் அமர்ந்தார். அங்கே செருப்பு தைக்கும் கைவினைஞன் ஒருவன், தாடியும் மீசையுமாக, பார்க்க அருளாளன் தோற்றம். எல்லோரையும் போல அன்னத்திற்குப் பறக்காமல், ஓடும் கங்கை நீரில் ஒரு வாய் மொண்டு குடித்துவிட்டு வந்து அமர்ந்த இடத்தில் இழுத்து மூச்சுவிட்டு, அதன் பின் பெரிதாய் சாப்பிட்டதைப் போல ஏப்பமும் விடவும், சிவவாக்கியருக்கு ஒரே வியப்பாகி விட்டது.
‘‘ஐயா, நீங்கள் அன்னம் உண்ணவில்லையா? எதற்கு இப்படி வெறும் தண்ணீரைக் குடித்து காற்றை விழுங்க வேண்டும்? செல்வந்தர்தான் அன்னத்தை தாராளமாகத் தருகிறாரே...?’’ என்றுகேட்க, அந்த மனிதரிடம் ஒரு குறுஞ்சிரிப்பு.
அது சிவவாக்கியருக்குள் ஒரு பெருநெருப்பை ஊதிவிட்டுவிட்டது. மற்றவர்களோ அவரை ஒரு பைத்தியக்காரன், திமிர் பிடித்தவன் என்றெல்லாம் சொன்னார்களேயன்றி அவரது சிரிப்புக்குள் இருக்கும் பொருளை விளங்கிக் கொள்ள முயலவேயில்லை.
சிவவாக்கியர் மட்டும் முயன்றார்.
‘‘ஐயா.... எப்படி உங்களால் உணவைத் தவிர்த்துவிட்டு காற்றையும் நீரையும் மட்டும் உணவாகக் கொண்டு வாழமுடிகிறது? ஏன் அந்த தான அன்னத்தைத் தவிர்க்கிறீர்! அருள்கூர்ந்து எனக்குத் தெரிவியுங்கள். உங்கள் செயலில் ஏதோ சூட்சுமம் இருப்பதாக நான் கருதுகிறேன்’’ என்று சிவவாக்கியர் கூறிட, அவரும், போனால் போகிறது என்று வாய் திறந்தார்.
‘‘அப்பனே.... நான் இந்தப் பஞ்சபூதங்கள் நெய்த உடம்பை அன்னமய கோசமாக வைத்திருக்க விரும்பவில்லை. அன்னமய கோசமாக இந்த உடம்பு உள்ளவரை கர்ம விடுதலை பெறுவது கடினம்.
எவ்வளவுதான் கங்கையில் குளித்தாலும் பழைய பாவம்தான் கரையும். புதிய பாவங்களை, கரை ஏறிய நிமிடமே புரியத் தயாராகிவிடுவோம். அன்னமயகோசத்திற்கு அப்படி ஒரு சக்தி.
ஏன் என்றால், அன்னத்தின் வழியாகத்தான் அந்தரத்தில் சுழலும் கோள்கள் நம்மை ஆட்டிவைத்தபடி உள்ளன.
நமக்கு எஜமானாக ஆதிசக்திதான் இருக்கலாம். இந்த கிளைச் சக்திகள் எதற்கு....?
இப்போது என் தேகம் பிராணமய கோசத்தில் உள்ளது. எனக்குப் பிராணவாயு மட்டும் போதுமானது. இந்த உடம்பில் பத்துவித பிராணன்கள் உள்ளன.
‘பிராணன், சுபானன், உதானன், வியானன், கூர்மன், சமானன், கிரிதரன், தேவதத்தன், நாகன், தனஞ்செயன் என்பவை அவைகளுக்கான பெயர்கள். இதில் ஒவ்வொரு பிராணக்காற்றும் உடம்பில் ஒவ்வொரு விதமாகச் செயலாற்றுகிறது. இவைகளை சீராக வைத்துக் கொண்டால் மனம் அமைதியாக இருக்கும். அப்படியே பிராணமய கோசத்தில் இருந்து மனோமய கோசத்திற்கு நாம் மாறி விடலாம். எண்ணங்களால் ஆனதுதானே மனம்? இன்பம் துன்பம் எண்ணங்களால், அதாவது நினைப்பதால்தானே ஏற்படுகின்றன?
இந்த எண்ணத்தையும் தியானத்தில் கட்டுப்படுத்தி, துளியும் சப்தமற்ற ஒரு நிலைக்கு மனதைக் கொண்டு சென்றுவிட, அடுத்த நொடியே ஆனந்தமயகோசம் ஆரம்பமாகிவிடுகிறது.
அப்படியே தியானத்தில் ஆனந்தமய லோகத்தில் எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் இருக்கலாம். உடம்பில் உணவுப் பொருள் இருந்தால் அது சிறுநீராகி, மலமாகி வெளியேற முயற்சி செய்யும். அதன் குணங்கள் முதலில் பிராணமய கோசத்திற்குள்ளேயே நுழையவிடாது. அதன் பின் எங்கிருந்து மனோமய கோசத்திற்குள் நுழைய முடியும்? மனோமயம் வசப்படாமல் ஆனந்த மயம் எப்படிச் சித்தியாகும்?
அதனால்தான், நான் உணவைத் தவிர்த்தேன். உணவிருந்தால் மட்டுமே ஜீவிக்கமுடியும் என்று கருதி உடம்பின் வசம் சிக்கியிருப்பவர்களைப் பார்த்து நகைக்கவும் செய்தேன்.’’
_என்று அவர் ஒரு நீண்ட விளக்கம் தர, சிவவாக்கியர் விக்கித்துப் போனார்.
‘‘பக்தி செய்தால் போதும் என்று எண்ணி
யிருந்தேன், இப்பொழுதுதான் புரிகிறது பக்தியோடு இப்படிப்பட்ட யுக்திகளும் தேவை என்று’’ கூறிய சிவவாக்கியர், ‘‘நானும் இனி உங்களைப்போல, பிராணமய கோசத்தில் வாழ எனக்கு வழிகாட்டுங்கள்’’ என்று கேட்க, அதற்கும் அவரிடம் முதலில் புன்னகைதான் பதிலாக வெளிப்பட்டது.
‘‘இந்தச் சிரிப்புக்குப் பொருள் என்ன ஸ்வாமி?’’
‘‘பிராணமய கோச வாழ்வு அவ்வளவு எளிதாக வசப்படும் ஒன்றல்ல மகனே...!’’
‘‘எளிதான ஒன்று எனக்கெதற்கு ஸ்வாமி. வலியதாக இருந்தால்தானே நானும் வலியவன் ஆவேன்!’’
‘‘அப்படியா... பிராணன் உனக்கு வயப்பட உன் உடம்பு ஒத்துழைக்க வேண்டும். அது இப்பொழுது இந்த உலகத்து உணவுச் சுவைகளால் ஆக்ரமிக்கப்பட்டுக் கிடக்கிறது. அதன் ஆக்ரமிப்பு எவ்வளவு என்று முதலில் தெரிய வேண்டும்.’’
‘‘அதற்கு நான் என்ன செய்யவேண்டும்..?’’
‘‘நான் சொல்கிறபடி செய்... மற்றவை தானாக தெரிய வந்துவிடும்.’’
‘‘சொல்லுங்கள்; நான் என்ன செய்யவேண்டும்?’’
‘‘முதலில் கங்கைக்குச் செல். நான் ஒரு பொற்காசு தருகிறேன். அதை கங்காதேவிக்கு காணிக்கையாக அளித்துவிட்டு, பின் கங்கையில் நீராடிவிட்டு வா. மற்றதை பிறகு பேசலாம். இந்தா பொற்காசு!’’
அவர் ஒரு பொற்காசு எடுத்துத் தர, மறுபேச்சு பேசாமல் அத்துடன் கங்கைக்குள் இறங்கினார். அந்தக் கைவினைஞரை மானசீக குருவாய் கருதிக்கொண்டு ‘கங்கா தேவி.... என் குருநாதர் இட்ட கட்டளைப்படி நான் இதை காணிக்கையாக்குகிறேன்!’ என்று எண்ணிக் கொண்டே காசுடன் கங்கைக்குள் இறங்க, வளையல் கரம் ஒன்று நீரில் இருந்து தோன்றி அந்த காசினைப் பெற்றுக் கொண்டது.
‘தாயே.... அவர் எவ்வளவு உயரியவராக இருந்தால் அவர் அளித்த காசைப் பெற இப்படி நீயே நேரில் வருவாய்.... மகிழ்ச்சியம்மா’ என்று மனமுருக வணங்கி, நீராடிவிட்டு, திரும்பி வந்தார், அப்படி வந்தவர் ‘‘உங்கள் பெயரைச் சொல்லி அதன்படி கட்டளையை நிறைவேற்ற வந்தேன் என்றேன்; கங்கா தேவியே நேரில் கை நீட்டி காசினைப் பெற்றுக் கொண்டாள். உங்களால் எனக்கு அவளின் வளைக்கரம் தரிசனமாய் கிட்டியது’’ என்று கூற, அந்த சித்த புருஷர் முகத்தில் புன்னகை திரும்ப அரும்பியது.
‘‘சுவாமி, எதற்கு திரும்பவும் புன்னகைக்கிறீர்கள்?’’
‘‘உன்னை எண்ணியே சிரித்தேன். ஒரு பொற்காசை கங்கையில் வீச உனக்குத் தயக்கமாக இல்லையா?’’
‘‘இதில் என்ன தயக்கம்... உங்கள் கட்டளைக்கு முன் பொற்காசா பெரிது?’’
‘‘சரி... கங்கை உன் காசை பெற்றுக் கொண்டாளே, அவளுக்கு எதற்கு காசு என்று உனக்குள் கேள்வி எழவில்லையா?’’
‘‘நாம் அளிப்பதை ஏற்றுக் கொள்ளவென்றே உள்ளவள் கங்காதேவி. எல்லோரும் தங்கள் பாவத்தைத்தான் அவளிடம் சேர்க்கின்றனர். நீங்கள்தான் பற்றற்ற நிலையில் பொன்னையே அவளுக்குத் தரச் சொன்னவர். அவளும் அதை மகிழ்வுடன் ஏற்று ஆசிர்வதித்ததாகவே உணருகிறேன்.’’
‘‘சூட்சுமத்தை உணர்ந்து பேசுகிறாய். உண்மைதான். இந்த மாய உலகில் தருவதையே நாம் எப்பொழுதும் பெறுவோம். கங்கையிடம் மாத்திரம் அதில் ஒரு தலைகீழ் மாற்றம் நிகழும். கங்கை நமது பாவத்தை புண்ணியமாக்கித் தருபவள். அதேபோல பொன் என்னும் பற்றை பெற்றுக் கொண்டு பதிலுக்கு பற்றற்ற பொன்னான உள்ளத்தை உனக்கு அவள் அளிக்கவே நான் அவ்வாறு செய்யச் சொன்னேன். உனக்கு பொன்னான மனது வேண்டுமா; இல்லை பொன்னே வேண்டுமா?’’
‘‘சுவாமி, இது என்ன சோதனை...?’’
‘‘கேள் மகனே.... இதோ இந்தத் தோல் பை, நீ எவ்வளவு கேட்டாலும் தங்கம் தரும். பார்க்கிறாயா?’’
அவர் அதில் கைவிட்டு மீண்டும் ஒரு தங்க நாயணத்தை எடுத்துத்தர, சிவவாக்கியர் அதைத் தீண்டவே மறுத்துவிட்டார்.
‘‘மகனே... நீ பிறவியிலேயே திருவோடு பிறந்தவன். அதை நீ இந்த சோதனைகளில் நிரூபித்துவிட்டாய். உன்னால் எளிதாக பெரும் யோகியாக முடியும். இன்றுமுதல் நீ என் சீடன்’’ என்ற அவர், அன்றே சிவவாக்கியருக்கு பயிற்சி அளித்தார்.
அப்படியே ஒரு பேய்ச்சுரைக்காயையும் கங்கை நதி மணலையும் அள்ளி சிவவாக்கியர் வசம் தந்தவர், இதைக் கொண்டு உணவு சமைக்கமுடியும் என்று நம்பி, உணவும் சமைத்து எவள் ஒருத்தி உனக்கு அன்னமிடுகிறாளோ அவளே உன் மனைவி.
இல்லற கருமத்தில் பாக்கி உனக்கு உள்ளது. அதை ஈடேற்றாது நீ முக்திநிலையை எட்டமுடியாது. இது கசப்பான சுரைக்காய்.... கடிதான மண்... ஆனால் இதில் கசப்பை நீக்க முடிந்தவள் தான், உன் வாழ்வில் உள்ள கசப்பையும் நீக்க முடிந்தவள். இந்த மண்ணில் பயிரிட்டால்தான் நெல்விளையும், இந்த மண்ணே பயிராகி சோறாகுமா...? அப்படி ஆக்கக் கூடிய ஒருத்தி இருந்தால் அவள் எத்தனை பெரிய யோகாம்சம் உடையவளாக இருக்கமுடியும் என்று நீயே கணக்கிட்டுக்கொள்’’ என்று கூறி, சிவவாக்கியரை அனுப்பிவைத்தார்.
காசியம்பதி விஜயம் சிவவாக்கியரை இப்படி ஒரு பெரிய திருப்பத்துக்கும், அனுபவங்களுக்கும் ஆட்படுத்தியது.
காலத்தால் சிவவாக்கியருக்கு மணலையும் பேய்ச்சுரைக்காயையும் சமைத்துப்போட்ட குறமகள் ஒருத்தி மனைவியானாள்.
சிவவாக்கியர் இளவயதில் மன்மதன் போல் இருந்தார். அவரது அழகில் மயங்கி எந்த ஒரு பெண் அவரை மணக்க விரும்பினாலும் சரி, சிவவாக்கியர் மணலையும், பேய்ச்சுரைக்காயையும் தந்து, சமைக்க முடிந்தால் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறிட, அவர்களோ இது பைத்தியக்காரத்தனம் என்று ஒதுங்கிச் சென்றனர்.
குறப்பெண்தான் அதன் சூட்சுமம் உணர்ந்து சமைத்தவள். எப்படித் தெரியுமா?
மணலையும் சுரைக்காயையும் அரிந்துபோட்டு சமைக்கையில், கல்லை மண்ணானது உறிஞ்சி எடுத்துக் கொண்டது. மண் இங்கே பெண்; சுரைக்காய்தான் சிவவாக்கியர். அவரது சருமம்தான் கசப்பு. அதை நீக்கித் தரமுடிந்த சமையல்காரிதான் அக்குறமகள். இப்படி ஒரு செயல் செய்து அதன் புண்ணிய பலத்தால் முக்தி பெறவேண்டும் என்பது அவளுக்கான விதிஅமைப்பு. அவளால் தன் சருமம் நீங்கப்பெற வேண்டும் என்பது சிவவாக்கியரின் விதியமைப்பு.
சிவவாக்கியர் இல்லறத்தில் நின்றபோதும் யோகமார்க்கத்தில் இருந்து விலகவில்லை. இதனால் பல சிவனடியார்கள், சித்தபுருஷர்கள் அவரது இல்லத்திற்கு வந்து சென்றனர். அவர்களில் கொங்கணரும் ஒருவர். கொங்கணர் ரசவாதம் செய்யத் தெரிந்தவர். இரும்பைத் தங்கமாக்குவதில் நிகரில்லாதவர்.
சிவவாக்கியர் இல்லம் வரும்போதெல்லாம் அங்கு கிடைத்த இரும்புத் துண்டுகளை தங்கமாக்கி, அவருக்கும் அவர் மனைவிக்கும் பற்று இருக்கிறதா என்று சோதிக்க முயன்றார்.
சிவவாக்கியரோ அசரவில்லை. அன்னமய கோசமாக இருந்த உடம்பை பிராணமயத்துக்கும், அதன்பின் மனோ மயத்துக்கும், அதன்பின் ஆனந்தமய கோசத்திற்கும் இலகுவாக சென்றுவரத் தெரிந்த சிவவாக்கியர், சில மூலிகைகளால் தனது சிறுநீரையே ரசவாதம் புரியத் தகுந்த நீராக மாற்றிக் கொள்ளக் கூடிய அளவுக்குச் சென்றுவிட்டார்.
ஒரு கல்மேல் அவர் சிறுநீர்பெய்தால், அந்த நீரின் கிரியையால் அந்தக்கல் அப்படியே தங்கமாக ஆகிற்று.
கொங்கணரும் அதை அறிந்து, ‘தங்கமாக்குதல் பெரிதில்லை; தானே தங்கமாதல்தான் பெரிது என்பதை நீ புரிந்து கொண்டு விட்டாய்’ என்று, அவரைப் பாராட்டவும் செய்தார்.
சிவவாக்கியர் தங்கத்தை ஆட்கொல்லியாகத்தான் பார்த்தார். காட்டில் ஒருமரம், தங்கம் தந்தது. இவரோ அதைப் பொருட்படுத்தாமல் இந்த மரம் ஒரு ஆட்கொல்லி என்றார். அப்படித்தான் ஆயிற்று. அந்தமரத்தை தங்கம் என்று அறிந்து அதை வெட்டி எடுத்துச் செல்ல வந்தவர்கள் தங்களுக்குள் அடித்துக்கொண்டு உயிரை விட்டனர்.
இதையே தன் பாடல்களிலும் உபதேசிக்கலானார். சிவவாக்கியம் எனும் இவரது பாடல்கள், எளியவை: அரிய கருத்துடையவை.
அதில் அனைவரும் கூறி மகிழும் ஒரு பாடல்:
‘நட்டகல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே சுற்றிவந்து முணு முணென்று சொல்லு மந்திரம் ஏதடா?
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்!
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ?’
தனக்குள்ளே தெய்வம் இருப்பதை அறியாமல் எங்கெங்கோ தேடி அலையும் மனிதனின் அறியாமையை எண்ணி சிவவாக்கியர் பாடியது இது. சிவனை உள்ளுக்குள் உணர்ந்து அதனை பிறரும் உணரவேண்டும் எனச் சொன்னவர் சிவவாக்கியர்.
 
  Today, there have been 5 visitors (5 hits) on this page! View Full Moon Day Time table  
 
மனதைத் திறந்து வைத்திரு. நீ அறிந்ததைவிட பெரிய விடயம் ஒன்று இங்கு நடந்துகொண்டிருக்கிறது This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free