மிகவும் இருண்டிருந்தால் உன்னால் நட்சத்திரங்களின் ஒளிக்கீற்றைப் பார்க்க முடியும்..
   
  வராகி சித்தர்
  பிரம்ம முனி
 
சிவாம்சமாக சுந்தரானந்தரையும், பின் விஷ்ணு அம்சமாக இடைக்காடரையும், பிரம்ம அம்சமாக கோரக்கரையும் தொடர்ந்து, பிரம்ம முனியை காண இருக்கிறோம்.
அடுப்புச் சாம்பலில் மச்சேந்திரரால் ஜென்மமெடுத்தவர் கோரக்கர். பிரம்மத்தின் தொழில் படைப்பது! மச்சேந்திரரும் அதன்வழி கோரக்கரைப் படைத்தார்.
கோரக்கரின் இனிய நண்பர்தான் பிரம்ம முனி!
பிரம்ம முனி குறித்த ஜென்ம காரணங்கள் வம்சக் குறிப்புகள் தெளிவாக காணப்படவில்லை. ஆனால், இவரும் கோரக்கரும் ஒன்றுகூடி முழுக்க முழுக்க சந்தோஷம் மட்டுமே உள்ள, சொர்கத்திற்கு நிகரான, ஏன் அதற்கும் மேலான ஒரு புது உலகையே படைக்க முயன்ற கதை, சித்தர்கள் வரலாற்றில் தனித்த பார்வையுடன் காணக் கிடைக்கிறது. அதாவது பஞ்சபூதங்களையே ஆட்டுவிக்கவும் விரும்பியவர்கள் இவர்கள்.
பொதுவாக சித்தர்கள் மூன்று பிரிவுக்குள் அடங்கி விடுவார்கள். ‘யோக சித்தம், காய சித்தம், வாத சித்தம்’ என்பதே அந்தப் பிரிவுகள். யோக சித்தர்களுக்கு உடம்பை ஜெயிப்பதும் உயிர் உணர்வான குண்டலினியில் புகுந்து உச்சந்தலையில் உள்ள சஹஸ்ராரத்தை அடைந்து அப்படியே ஆனந்த நிலையில் திளைப்பதும் தான் குறி.
அடுத்து காய சித்தர்கள்!
உடம்பாகிய வீட்டை உடுக்குபோல வைத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்தவர்கள். வியாதிகளை ஜெயித்து, அஷ்டமா சித்திகளையும் வசப்படுத்தி உடம்பை மலைபோல பாரமாக்கிக் கொள்ளவும் இவர்களால் முடியும்; பஞ்சு போல லேசாக்கிக் கொள்ளவும் முடியும். இவர்களது குறியெல்லாம் உடம்பை தன் இஷ்டப்படி ஆட்டிவைப்பது, உடம்புக்கு வரும் கேட்டை கல்ப மூலிகைகளால் ஒழித்துக் கட்டுவது.
மூன்றாவது ரகம் _ வாத சித்து.... அதாவது ரசவாத சித்தர்கள்....! இவர்கள் இரும்பு, செம்பு, ஈயத்தின் அடிப்படை குணத்தையே மாற்றியவர்கள். ரசமணிகளைச் செய்து உடம்பின் ரத்த ஓட்டத்தில், தட்ப வெப்பத்தில் மாற்றங்கள் செய்யத் தெரிந்தவர்கள். மருந்தையே உணவாக உட்கொண்டவர்கள். எந்த வியாதிக்கு எந்த மூலிகை ஏற்றது என்று கண்டறிந்து அதை எழுதியும் வைத்தவர்கள். இப்படி சித்த புருஷர்களை அவர்களது நோக்கங்களுக்கும் செயல்பாடுகளுக்கும் ஏற்ப வகைப்படுத்துவார்கள். இந்த மூலிகைப் பிரிவு பின்னாளில் தோன்றியது. தொடக்கத்தில் கைலாய வர்க்கம், பின் மூல வர்க்கம், அதற்கும் பின் பாலவர்க்கம் என்று மூன்று பிரிவுகளில்தான் இருந்தார்கள் என்போரும் உண்டு.
இதில் கைலாய வர்க்கத்தவர்க்கு அந்த கைலாச நாதன்தான் ஆத்ம கடவுள். மூல வர்க்கத்தவர்க்கு ஏதாகிலும் ஒரு இஷ்ட தெய்வம். (காளி, விஷ்ணு போல்).
பால வர்க்கத்தவர்க்கு முருகன்தான் ஆத்ம கடவுள்.
இப்படிப்பட்ட சித்தர்களின் எண்ணிக்கை
எவ்வளவு தெரியுமா? விஷ்ணு புராண கருத்துப்படி 88,000 பேர்கள்!
காரைச் சித்தர் என்பவர் தன்பாடலின் ஒரு வரியில் ‘சதகோடிச் சித்தர்கள்’ என்கிறார். அதாவது நூறு கோடி சித்தர்கள்.
கபீர்தாசர் கருத்துப்படி சித்த புருஷர்கள் 84 பேர்தான் உள்ளனர்.
ஆனால், நமது தமிழ் மரபில் பதினெண் சித்தர்கள் என்கிற கணக்குதான் இறுதியாக மிஞ்சி உள்ளது.
சித்தர்கள் பற்றி சிந்தித்தால் இப்படி விரிந்து கொண்டே போகும். இதில் பிரம்ம முனி எந்த வகையைச் சேர்ந்தவர் என்றால், இவர் எல்லா நிலையிலும் அடங்குகிறார். யோகத்திலும் சரி, கல்பத்திலும் சரி, ரசவாதத்திலும் சரி... கோரக்கரும் பிரம்ம முனியும் ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டனர் என்றே கூறலாம். எப்படி?
இருவருக்குமே யோக ரகசியங்கள் தெரிந்திருந்தன. அதேபோல கல்ப வித்தையும் வசப்பட்டிருந்தது. கூடவே ரசவாதத்திலும் தலைசிறந்து விளங்கினர். ரசவாதம் தொடர்பாக கோரக்கர் புரிந்த ஒரு சாகஸம் அபிதான சிந்தாமணியில் ஒரு கதையாகவே காணக் கிடைக்கிறது.
கோரக்கரின் குருவான மச்சமுனி தன் வாழ்க்கைப் போக்கில் மலையாள தேசத்தில் சுற்றி வருகையில் அவருடைய மகிமை அங்கே வெகு வேகமாக பரவலாயிற்று. குறிப்பாக அங்குள்ள ஒரு ஜமீன்தாரிணியைப் போன்ற பிரேமளா என்பவர் மச்சமுனியின் மேல் மாளாக் காதல் கொண்டாள்.
அவரை மணந்து நோய் நொடியற்ற ஒரு வாழ்க்கை வாழ்ந்திடவும் விரும்பினாள். அதற்கு அவள்வரையில் ஒரு சரியான காரணமும் இருந்தது. அவளது வம்சத்தில் பிறக்கும் வாரிசுகள் ஒருவரும் உயிரோடு இல்லாமல் சிறு குழந்தையாக இருக்கும் போதே மரித்துப் போயினர்.
இதனால் அவளுக்கு எதிர்காலத்தின் மீதே பற்றில்லாமல் இருந்தது. ஒரு பயமும் இருந்தது. மச்சேந்திரரைப் பார்த்ததும் அது நீங்கியது. அவருக்குப் பணி செய்து அவரை மிகக் கவர்ந்தாள். மச்சேந்திரர் மகிழ்ந்து ‘உனக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்க ‘எது கேட்டாலும் தருவீர்களா’ என்று இவள் கேட்க ‘என்னிடம் இருக்கும் எதையும் தருவேன்... இது சத்தியம்’ என்று மச்சேந்திரர் உரைக்க, அப்படியானால் ‘நான் வேண்டுவது உங்களைத்தான்’ என்று கேட்டு அவரையும் அடைந்து விட்டாள். அதன் பின் மச்சேந்திரர் பிரேமளாவே கதி என்று கிடக்க அவர்களுக்கு மீனநாதன் என்று ஒரு மகனும் பிறந்தான். நாட்கள் கடந்தன. கோரக்கருக்கு, மச்சேந்திரர் சித்த மருள் நிலையில் இருந்து விலகி சராசரி மனிதராகி வருவதும் தெரியவந்தது. அதி அற்புதமான ஒரு மனிதர்... சிவ பார்வதியின் உரையாடலைக் கேட்டு மீனாக இருந்து மனிதப் பிறப்பெடுத்தவர், அதனின்றும் மீண்டு மோட்ச கதிக்குச் செல்லாமல் திரும்பவும் மாயை சூழ்ந்த வாழ்வில் சிக்கிக் கொண்டதை கோரக்கரால் சகிக்க முடியவில்லை.
பிரேமளாவிடம் இருந்து சாதுர்யமாக அவரை மீட்டு அழைத்துக் கொண்டு கேரள தேசம் விட்டு புறப்படலானார்.
பிரேமளா தந்திரமாக தன்வசமுள்ள தங்கக் காப்புகளை மச்சமுனியிடம் கொடுத்து விட்டாள். தங்கக் காப்புகளுக்காக கள்வர்கள் குறுக்கிடுவார்கள்; அப்போது குருவைக் காப்பாற்ற கோரக்கர் தானாக முன்வந்து மடிந்தும் போவான்; பின் மச்சமுனியும் திரும்பி விடுவார் என்பது அவள் எண்ணம்.
ஆனால் கோரக்கர் வழியில் அந்தத் தங்கத்தைத் தூக்கி சுனை ஒன்றுக்குள் போட்டு விட்டார். இதைக் கண்ட மச்ச முனியும் ‘ஏன் இப்படிச் செய்தாய்...? நீ ஒரு குருதுரோகி!’_ என்று பழித்துப் பேசி சாபம் தரமுயல, அவரைத் தடுத்த கோரக்கர் சில மூலிகைகளை அவர் எதிரிலேயே உண்டு நீரையும் குடித்திட, அவரிடம் சிறுநீர் பெருகியது. அதை மலைப்பாறை மேல் பெய்திட அந்த பாறை முழுவதும் தங்கமாயிற்று. மச்சமுனியைப் பார்த்து ‘குருவே. உங்கள் மாணாக்கன் நான். ரசவாத மூலிகைகளால் இந்தப் பாறையை நான் தங்கமாக்கியுள்ளேன். நீங்கள் முயன்றால் இந்த மலையையே தங்க மலையாக்க முடியும். ஆனால், உங்கள் சித்தத்தில் காமம் கலந்து விட்டதால் சராசரியாகி ஆசாபாசத்துடன் பேசவும் செய்கிறீர்கள். சிந்தித்துப் பாருங்கள்’ என்று கூற, மச்சமுனியும் கோரக்கரை கட்டித்தழுவிக் கொண்டு, ‘நீ குருவை மிஞ்சிய சிஷ்யன் உன்னிடம் ‘யோகம் கல்பம், ரசம்’ எனும் மூன்றையும் காண்கிறேன் நீ வாழ்க.’ என்று வாழ்த்தியருளினார்.
இப்படிப்பட்ட இவருக்கும் இந்த உலகம் ஒரு நாள் பிடிக்காமல் போயிற்று. காரணம்? இந்த உலகில் நிலவும் மாயை! இந்த மாயை தான் ஆசாபாசங்களுக்குக் காரணமாக உள்ளது. மனித குலமும் இதனால் பாவம், புண்ணியம் என்று மாறி மாறி விழுந்து எழுந்தபடி உள்ளது. மாயை இல்லாத ஒரு புதிய உலகம்... அதில் பிறப்பவர்கள் அல்லது அதில் நுழைபவர்கள் எப்பொழுதும் இன்பமாகவே இருப்பார்கள். துன்பத்தின் சாயல்கூட அங்கே இருக்கக் கூடாது. அப்படி ஒரு உலகத்தைப் படைத்து அதில் குடி புகுந்து விடவேண்டும். தம் விருப்பப்படி அதில் பஞ்சபூதங்களை ஆட்டி வைக்க வேண்டும்.
ஒருவனை படைக்கும் போதே அவனை நல்லவனாக படைத்து விட்டால் அவன் நல்லவனாகத்தானே இருந்தாக வேண்டும்? எனவே அந்த உலகில் நல்லவர்களை மட்டும் திட்டமிட்டுப் படைத்து பொய், சூது, வஞ்சனை என்று எதுவுமில்லாத ஒரு பொன்னுலகமாக அதை உருவாக்க வேண்டும் என்று பிரம்ம முனியும் கோரக்கரும் தீர்மானித்தனர். அதன் பொருட்டு ஒரு யாகமும் செய்ய நினைத்தனர். யாகத்தில் ஈசனிடம் அவர்கள் கோரப் போகும் வரம் ‘புதியதோர் உலகம்!’. விஷயம் தேவர்கள் காதுவரை சென்றது. அவ்வளவு பேரும் விச்சித்துப்போயினர். இது என்ன இயற்கைக்கு முரணாக என்றும் எண்ணினார்கள்.
இரு சித்தர்களும், தங்கள் யாகத்திற்கு உகந்த நாளாக மாசி மகத்தை தேர்வு செய்தனர். வானிலும் பௌர்ணமி! பௌர்ணமி இரவை இருட்டாகக் கருதமுடியாது. அது ஓர் இதமான வெளிச்ச காலம். அதிலும் மக நட்சத்திர காலத்தில் வான்வெளியில் கிரகசஞ்சாரங்களில் மானிட உய்வுக்குக் காரணமான பல மாற்றங்கள் நிகழ்கின்றன.
எனவே உரிய வேளையில் யாகம் வளர்த்து உரிய முறையில் அதைச் செய்தனர்.
தேவருலகமே கண் கொட்டாமல் பார்த்தது. பஞ்ச பூதங்களும் ஒன்றையன்று பார்த்துக் கொண்டன! இந்த யாகம் பரிபூரணமாகி முழுமையாக ஈடேறினால் இயற்கைக்கு மாறுபட்ட ஒரு உலகம் தோன்றிட அதுவே காரணமாகி விடும். இந்த இரு முனிவர்களும் இறைவனையும் மிஞ்சிய சக்திகளாகிவிடக் கூடும். இதைத் தடுப்பது எப்படி என்று பலவாறு எண்ணிய போது, யாகத்தின் புகையில் முனிவர்களை சோதிக்கும் பொருட்டு இருளும், மருளும் அழகிய பெண் உருக்கொண்டு தோன்றினர். அப்படியே யாக மேடையை சுற்றி வந்து நாட்டியமும் ஆடிட, சித்த முனிகள் இருவரின் புலனடக்கமும் அதனால் சிதறியது. யாகமும் தடைபட்டது. அங்கே அக்னியும் வாயுவும் கூட வந்து விட்டனர். அவர்கள் இருவரும் இருள்தேவியையும், மருள் தேவியையும் பார்த்து மயங்கி நின்றனர்.
முனிகள் தரும் அவிர் பாகத்தை பெற்றுக் கொண்டு, தேவருலகம் செல்ல வேண்டிய அக்னியின் அந்த மயக்கமும், அதற்கு உதவ வேண்டிய வாயுவின் மயக்கமும் முனிவர்களை கோபத்தில் பிடித்துத் தள்ளியது.
இதனால் மன ஒருமை சிதைந்தது.
இருவர் மனதிலும் கோபத்தீ மூண்டது.
‘‘பெண்களே யார் நீங்கள்?’’ _ கோபத்தோடு கேட்டனர்
‘‘நான் மருள்தேவி... இவள், இருள் தேவி.. யாகம் செய்யுமிடத்தில் கர்த்தாக்களை சோதிப்பது எம் கடமை. அதைச் செய்யவே இங்கே வந்தோம். எங்களைக் கண்டு நீங்கள் மதிமயங்கவில்லை. ஆனாலும் அக்னியும், வாயுவும் மயங்கி விட்டனர். இதனால் இடையறாமல் நடைபெற வேண்டிய யாகம் தடைபட்டு விட்டது. எங்கள் நோக்கமும் ஈடேறிவிட்டது’’ என்று அவர்கள் கூறி, கோரக்கருக்கும், பிரம்ம முனிக்கும் கும்பியில் வெடித்தது கோபம்.
‘‘உத்தம நோக்கம் எங்களுடையது. அதைச் சிதைத்து விட்டீர்கள். எங்கள் மன ஒருமை உங்களால் கெட்டது. அக்னியும், வாயுவும் கூட உங்களால் கெட்டனர். இப்படி மன ஒருமையைக் கெடுத்த நீங்கள், மன ஒருமைக்கு இனி கால காலமாக காரணமாக விளங்கும் ஒரு மூலிகைப் பத்திரமாக விளங்கக் கடவது’’ _ என்று கோரக்கர் சாபமிட, இருள்மாயை உடனே அங்கே கஞ்சாமூலிகைச் செடியாக உருக்கொண்டது. அடுத்து பிரம்ம முனியும் அதையே கூறி சாபமிட, மருள்மாயை புகையிலைச் செடியாகியது.
சாபமிட்டதால் இருவரின் தபோ பலமும் முற்றிலும் வீணாகியது. இருப்பினும் அவர்கள் உரிய காலத்தில் தொடங்கிய யாகம் முழுப்பலனை பெறாவிட்டாலும் அவர்களுக்கு வேறு சில சக்திகளை அளித்தது.
அதன்படி இருவருமே அகால வயதில் இறந்தவர்களை உயிர்பிக்கச் செய்யும் வல்லமையைப் பெற்றனர். இவர்களால் சபிக்கப்பட்ட இரு தேவிகளும் கல்ப மூலிகைகள் ஆயினர்.
இந்த மூலிகைகளை நெருப்பு, காற்றின் துணை கொண்டு புகைக்கையில் மன ஒருமையும் புலனடக்கமும் மயக்கமாகத் திகழும். நெருப்பு, காற்றின் துணையின்றி பச்சையாகக் கொண்டாலோ இவர்கள் காயகல்பமாகத் திகழ்வார்கள்.
இவர்களைப் பார்த்து மயங்கிய அக்கினிக்கும் காற்றுக்கும் இப்படி ஒரு சாபம். அதனால்தான் இன்றும் புகைப்பவர்கள் கொடிய நோய்க்கு உள்ளாகி இறப்புவரை செல்கின்றனர். புகைக்காதபடி நேரிடையாக காயகல்பமாகப் பயன்படுத்த, சித்தர்களைத் தவிர பிறருக்குத் தெரியவில்லை.
மொத்தத்தில் கோரக்கர், பிரம்மமுனி இருவரின் தனிப் பெரும் எண்ணம், மண்ணில் இரு புது மூலிகைக்கே காரணமாகிவிட்டது.
அதன்பின் இறைசெயலுக்கு மாறான செயல்களில் இவர்களது ஆர்வமும் குறைந்து போனது. மாறாக யோகம், கல்பம், ரசவாதம் என்னும் மூன்றிலும் உச்சாணிக்கு சென்றனர். பின் பேரூரில் சித்தியடைந்தனர்
 
  Today, there have been 4 visitors (4 hits) on this page! View Full Moon Day Time table  
 
மனதைத் திறந்து வைத்திரு. நீ அறிந்ததைவிட பெரிய விடயம் ஒன்று இங்கு நடந்துகொண்டிருக்கிறது This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free