மிகவும் இருண்டிருந்தால் உன்னால் நட்சத்திரங்களின் ஒளிக்கீற்றைப் பார்க்க முடியும்..
   
  வராகி சித்தர்
  பாம்பாட்டி சித்தர்
 
சித்தர்களில் போகர் எவ்வளவு பிரபலமோ அவ்வளவு பிரபலமானவர், பாம்பாட்டி சித்தர்.
காரணப் பெயர்கள் சாதாரணமாக மனதைவிட்டு அகலவே அகலாது. அதிலும், படையையே நடுங்கச் செய்யும் பாம்பினை ஆட்டி வைப்பவர் என்பதால், ஒரு பிரமிப்போடு கூடிய பார்வை இந்த சித்தர் மேல் எல்லோருக்கும் உண்டு.
இவரின் தொடக்கம் மிகச் சாதாரணமானது. ஜோகியர் என்னும் மலைக் குடியர் இவர். பளியர், ஜோகியர், படுகர், வடுகர், வட்டகர், என்று அந்த நாளில் மலைகளில் வசிப்பவர்களுக்குப் பெயர்கள் இருந்தன. இவர்களில் ஜோகியர்கள் பாம்பு பிடிப்பதில் சிறந்தவர்கள். இன்றைய இருளர்களுக்கு ஜோகியர்களே முன்னோடிகள்.
ஒருமனிதனின் பிறப்பானது அவனது முற்பிறவி வினைக்கு ஏற்பவே அமைகிறது. அரசனுக்கு மகனாய்ப் பிறப்பது முதல் ஆண்டியாய் இருப்பது வரை அனைத்தும் கருமம் சார்ந்ததே.
பாம்பாட்டி சித்தரும் கர்மப்படி ஜோகியராய்ப் பிறந்து பாம்பு பிடித்து அதை ஆட்டிவைப்பது அதோடு விளையாடுவது இவற்றில் எல்லாம் அதிசிறந்தவராகத் திகழ்ந்தார்.
இவர் காலத்திலும், நாகரத்தினங்களுக்காக பாம்புகளைத் தேடுவோர் இருந்தனர். பல ஆண்டுகாலத்திற்கு ஒரு பாம்பானது ஒருவரையும் தீண்டாது வாழ்ந்திட, அந்த விஷமானது கெட்டிப்பட்டு கல் போலாகி அந்தப் பாம்பிற்கே அது வினையாகும். அந்தக் கல், அதற்கு வேதனை தரும். எனவே அது அந்த விஷக்கல்லை வெளியேற்ற மிகவும் சிரமப்படும். அப்படி சிரமப்படும் பாம்புகளை கவனித்துக் கண்டறிந்து, கெட்டியான கல்போன்ற அந்த விஷத்தை எடுத்து, அதை நாகமாணிக்கமாகக் கருதி அதிக விலைக்கு விற்பார்கள்.
சிலர் இந்த மாணிக்கத்தை ஒரு தாயத்துக்குள் அடைத்து இடுப்பில் கட்டிக் கொள்வர். இதனால் எதிர்மறை துன்பங்கள் நேராது என்பது நம்பிக்கை.
பாம்பாட்டி சித்தரும் பாம்பு பிடிப்பதில் சூரராக இருந்தபோது அவருக்கும் நாகமாணிக்கத்தை தலைமேல் வைத்திருக்கும் பாம்பைத் தேடுவது ஒரு பெரும் லட்சியமாகவே இருந்தது.
ஆனால் அந்த மாதிரி பாம்புகள், அவ்வளவு சுலபத்தில் வசப்பட்டுவிடாது. ஒரு நாள், அப்படி ஒரு பாம்புக்காக புற்று புற்றாக கையை விட்டுக் கொண்டிருந்த ஜோகியாகிய பாம்பாட்டி, ஒரு புற்றில் கையைவிட்டபோது, விக்கித்துப் போனார்.
உள்ளே, ஒரு சித்த புருஷர் தவமியற்றிக் கொண்டிருந்தார். அவர்மேல் பாம்பாட்டியின் கை பட்டுவிட, அவரது தவம் கலைந்தது. முதலில் கோபம் வந்தாலும், ஜோகியர் பிழைப்பே பாம்பு பிடிப்பதுதான் என்பதால், அது உடனேயே தணிந்தது.
‘‘நீ யாரப்பா...?’’ சித்த புருஷன் கேட்டார்.
‘‘ஜோகிங்க சாமி...’’
‘‘அரவம் பிடிப்பதுதான் உன் தொழிலா?’’
‘‘ஆமாங்க... பாழாப் போன தொழிலுங்க.. நாகமாணிக்கப் பாம்பு ஒண்ணு சிக்குனா கூட போதும். இந்தப் பொழப்ப விட்றுவேன்.. ’’
‘‘ஓ... மாணிக்கக் கல்லுக்காக பாம்புகளை வேட்டையாடுபவனா நீ?’’
‘‘இல்லீங்க... கல்லு கிடைக்கட்டும், கிடைக்காமப் போகட்டுங்க. ஊரே பயப்பட்ற பாம்புகளை தைரியமாப் பிடிச்சு, அதை மகுடி ஊதி ஆடவைக்கறது எனக்கு ரொம்ப பிடிக்குங்க... அதுல ஒரு பரவசம் இருக்குங்க!’’
‘‘அற்ப பாம்புகளைப் பிடித்து விளையாடுவதில் உனக்கு ஒரு பரவசமா?’’
‘‘அட என்னங்க நீங்க... புத்துகட்னது கூட தெரியாம உக்காந்து ஏதோ மந்திரம் சொல்லிகிட்டு இருக்கற உங்களுக்கு, மந்திரம் சொல்றதுல பரவசம்னா, எனக்குப் பாம்பை ஆட்டி வைக்கறதுல பரவசங்க. என் தைரியம் உங்களுக்கு உண்டா?’’
‘‘பகலில் வெளியே வர பயந்து கொண்டும், இரவில் இரை தேடியும், கரையான் புற்றுக்குள்ளும், துவாரங்களிலும் புகுந்து கொண்டு சுருண்டு படுத்துக் கொள்ளும் பயத்தின் சொரூபமான பாம்புகளைப் பிடிப்பதும் ஆட்டிவைப்பதுமே உனக்கு ஒரு பெரிய பரவசத்தையும் ஆர்வத்தையும் தருமானால், எனக்குள் இருக்கும் குண்டலினி என்னும் பாம்பை, நினைத்த பொழுதெல்லாம் ஆட்டி வைத்து, மலப்பைக்கு நடுவில் கிடக்கும் அந்தக் குண்டலினியை முதுகுத் தண்டு வழியாக உச்சந்தலையாகிய சகஸ்ராரத்திற்குக் கொண்டு சென்று சதாசர்வ காலமும் நித்ய பரவசத்தில் திளைத்தபடி இருப்பவனான நான், எவ்வளவு கர்வம் கொள்ளலாம் தெரியுமா?’’
அவர் கேள்வி, அந்த ஜோகிக்கு ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளித்தது.
‘உங்களுக்குள் ஒரு பாம்பா?’ _ இது முதல் கேள்வி. ‘குண்டலினியை எழுப்பி சகஸ்ராரம் வரை கொண்டு செல்வதில் அவ்வளவு பரவசம் உள்ளதா?’ _ இது அடுத்த கேள்வி...
அவரும், ‘‘அனுபவித்தால்தானே தெரியும்? சர்க்கரை என்று சொன்னால் இனித்துவிடுமா?’’ என்று திருப்பிக் கேட்க... ஜோகிக்கும் அவருக்கும் இடையே நெருப்பு பற்றிக் கொண்டது.
‘‘நீங்க சொல்றது ஏத்துக்க முடியாததுங்க சாமி... பாம்பு பிடிக்கறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? உயிர் போகற வாழ்க்கைங்க....’’
‘‘அப்படியா... யோகிக்கு அதெல்லாம் ஒரு விஷயமில்லையப்பா... உடம்பை ஆட்டிப் படைக்கத் தெரிந்த யோகிகளை, எந்தப் பாம்பும் எதுவும் செய்யாது... பார்க்கிறாயா?’’
அவர் கேள்வியோடு பக்கத்துப் புற்றில் கையை விட்டு நாகனையும், சாரையையும், கட்டு விரியனையும் வாலைப்பிடித்தெல்லாம் இழுத்து மேனி மேல் விட்டுக் கொண்டார். அவைகளும் அவரிடம் குழந்தை போல விளையாடின.
ஜோகிக்கு வியப்பு தாளவில்லை.
அந்த நொடி, ஜோகிக்கு தன் தைரியம், பரவசம் எல்லாம் ஓர் அற்பமான எண்ணமே என்பது விளங்கி விட்டது.
‘‘சாமி.... நான் உங்கள மாதிரி சாமியாருங்கள, என்னவோ ஏதோன்னு நினைச்சேன். ஆனா உண்மையில, என்னை நானே இவ்வளவு நாளா ஏமாத்திகிட்டு வந்திருக்கேன். சாமி... நான் இனி வெளிய இருக்கற பாம்பைப் பிடிச்சு அதை இம்சை பண்ணமாட்டேன். எனக்குள்ள ஒரு பாம்பு இருக்குன்னு சொன்னீங்களே... அதைப் பிடிக்க எனக்கு சொல்லித் தர்றீங்களா?’’
‘‘அது அவ்வளவு சுலபமல்ல... மன உறுதி, வைராக்யம் இரண்டும் வேண்டும்...’’
‘‘என்கிட்ட அது நிறையவே இருக்குங்க... சொல்லுங்க, நான் என்ன செய்யணும்?’’ ஜோகி கேட்க, சிஷ்யனாக ஏற்பது போன்ற கனிவான பாவனையில் அவரும் பார்க்க, அந்த நொடியே அவருக்கு அந்த ஜோகி சிஷ்யனானான்.
சில வருஷத்திலேயே குருவை விஞ்சும் சிஷ்யனாகி விட்டான்.
குருவின்மேல் ஒரு கம்பளிச் சட்டை கிடந்தது. அழுக்கேறிய சட்டை. ஆனால், அது அவர் உடல் சூட்டை ஒன்றே போல் வைக்க உதவிக் கொண்டிருந்தது. எப்பொழுதும் கம்பளிச் சட்டையுடன் காணப்பட்டதால், சட்டை முனி என்று அழைக்கப்பட்டார் அவர். சிஷ்யன் ஜோகியோ குண்டலினிப் பாம்பை ஆட்டிவைக்க வெகுவேகமாகக் கற்றதால், பாம்பாட்டி சித்தர் ஆனார்.
ஒரு சித்து உள்ளே வருவதுதானே கடினம்! அப்படி வந்துவிட்டால், அது வந்த அதே வழியில்தான் வரிசையாக எல்லா சித்துக்களும் வந்துவிடுமே?
பாம்பாட்டி சித்தரும் ஜெகஜ்ஜால சித்தரானார். எச்சில் உமிழ்ந்து, அந்த உமிழ் நீரில் தங்கம் செய்வதிலிருந்து, குப்பென்று ஊதி, ஊதிய வேகத்தில் காற்று விசையால் ஒருவரைக் கீழே விழவைப்பதுவரை அவரது சாகசங்களுக்கு ஓர் அளவே இல்லாமல் போயிற்று.
ஆனாலும், அவர் அவைகளைப் பெரிதாகக் கருதாமல், குண்டலினி யோகத்தைத்தான் பெரிதாகக் கருதினார்.
உலகத்துப் பாம்புகள், ஒன்றுமில்லாதவை. உள்ளிருக்கும் பாம்போ, சுகத்தின் மூலம் என்று, தானறிந்த உண்மையை உரக்கச் சொல்லத் தொடங்கினார்.
‘இருவர் மண் சேர்த்திட, ஒருவர் பண்ண
ஈரைந்து மாதமாய் வைத்த சூளை
அருமையாய் இருப்பினும் அந்த சூளை
அரைக் காசுக்கு ஆகாதென்று ஆடுபாம்பே!’
_ என்று உடல் பற்றி சொன்னாலும் சரி, உள்ளம் பற்றி சொன்னாலும் சரி... அதை குண்டலினியில் முடித்தார். அதை எழுப்பி ஆட்டி வைப்பதில்தான் எல்லாம் இருக்கிறது என்பதற்கு அவரே உதாரணமாக இருந்து, உலகுக்கும் நிரூபித்தார்.
ஒருமுறை, அரசன் ஒருவனை பாம்பு தீண்டிவிட, அவன் மரணித்துவிட்டான். அவனைக் கடித்த பாம்பையும் அடித்துக் கொன்று விட்டனர். அதைக் கண்ட பாம்பாட்டி சித்தர், ஓர் உபாயம் செய்தார். இறந்த பாம்பை எடுத்து, உயிருடன் இருப்பவர்கள் மேல் வீசி வேகமாக எறிய, அவர்கள் பயந்து ஓடினர்.
தங்களுக்கு உயிர் மேல் இருக்கும் பற்றினை அந்த நொடி வெளிக் காண்பித்தனர். அந்த நொடியில், உருமாறல் மூலம் அரசன் உடம்புக்குள் புகுந்த பாம்பாட்டி சித்தர், உயிர்த்து எழுந்து அமர்ந்தார். செத்த பாம்புக்கும் உயிர் தந்து, ‘உம் ஆடு’ என்றார்... அதுவோ உயிர் பிழைத்த ஆச்சரியத்தில் ஓடத் தொடங்கிற்று.
அரசர் எப்படிப் பிழைத்தார்? அவரால் செத்த பாம்பை எப்படிப் பிழைக்க வைக்க முடிந்தது? போன உயிர் எப்படித் திரும்பி வரும்? என்றெல்லாம் எல்லோரும் கேள்விகளில் மூழ்கிக் கிடக்க, அரசி மட்டும் சூட்சமமாக அரசரை வணங்கி, ‘‘என் கணவரை உயிர்ப்பித்து நிற்கும் யோகி யார்?’’ என்று கச்சிதமாய்க் கேட்டாள்.
பாம்பாட்டியாரும் அவளது தெளிவைக் கண்டு வியந்து, தான் யார் என்று உரைத்ததோடு, ‘‘அரவம் தீண்டி இறந்து போகுமளவு ஒரு கர்ம வாழ்வு இருக்கலாமா? இது எவ்வளவு நிலையற்றது... எவ்வளவு அச்சமுள்ளவர்களாக, உயிராசைமிக்கவர்களாக இருந்தால், செத்த பாம்பு மேலே விழுந்ததற்கே இந்த ஓட்டம் ஓடுவீர்கள்..!?’’ என்றெல்லாம் கேட்க, அனைவரும் சிந்திக்கத் தொடங்கினர்.
அப்படியே அரசனின் உடலில் இருந்த வண்ணமே, வாழ்வின் நிலையாமை, உடலின் தன்மை, உறவின் தன்மை, உலகமாயை, நிலையானவை எவை, நிலையற்றவை எவை என்று பல்வேறு பாடல்களைப் பாடினார்.
எளிய தமிழில் கருத்தைச் சொல்லி... அந்தக் கருத்தின் நிமித்தம் மகிழ்ந்து ஆடுபாம்பே... என்று அவர், தன் எதிரில் இருக்கும் பாம்புக்குச் சொல்வதுபோலவே, அகத்துக்குள் இருக்கும் பாம்புக்கும் உபதேசம் செய்தார்.
பின்னர், மலைத் தலங்களில் திரிந்து தவம் செய்த இவர், அதிக காலம் வசித்தது கோவை அருகில் உள்ள மருத மலையில் என்பார்கள்.
கார்த்திகை மாத மிருகசீரிட நட்சத்திரத்தில் அவதரித்ததாக இவர் பற்றி தெரியவருகிறது.
இவர், ‘சித்தாரூடம்’ எனும் நூலையும் எழுதியவர்
 
  Today, there have been 16 visitors (144 hits) on this page! View Full Moon Day Time table  
 
மனதைத் திறந்து வைத்திரு. நீ அறிந்ததைவிட பெரிய விடயம் ஒன்று இங்கு நடந்துகொண்டிருக்கிறது This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free