மிகவும் இருண்டிருந்தால் உன்னால் நட்சத்திரங்களின் ஒளிக்கீற்றைப் பார்க்க முடியும்..
   
  வராகி சித்தர்
  பிராந்தர்
 
பிராந்தன் என்றால் மலையாளத்தில் பைத்தியகாரன், சித்த சுவாதீனமற்றவன் என்று பொருள்.
பிராந்தர் என்ற பெயரைக் கொண்ட இந்த சித்தரையும் மக்களில் பலர் பைத்தியமாகவே பார்த்தனர்.
அதாவது கண்ணால் காண்பது, காதால் கேட்பது என்பார்களே அந்த மாதிரி வகையைச் சேர்ந்தது. இந்த மண்ணில் மக்களிடம் விஞ்ஞான பாதிப்பு காரணமாக கண்ணுக்குப் புலனாவதையும், கருத்துக்குத் தெளிவாவதையும் மட்டுமே ஒப்புக் கொள்வது என்பது வழக்கமாகிவிட்டது.
ஆனால், கண்ணுக்குத் தெரியாத காற்று, நம்மால் காண முடியாத_உணர மட்டுமே முடிந்த நமது உடம்பின் உள் இயக்கம், நமது பிள்ளைகள் மற்றும் தாய், தந்தை என்று உறவுகளின் மேல் நாம் வைக்கும் பாச பந்தமெல்லாம் உணர மட்டுமே முடிந்தவை.
இருப்பினும், பார்த்தால்தான் ஒன்றை நம்ப முடியும் என்கிற ரீதியில் உள்ளவர்களை திருத்துவதற்கென்றே வந்தவர்தான் பிராந்தர்.
‘கண்ணுக்குப் புலப்படும் அவ்வளவிலும் நீ எதிர்பார்க்கும் உண்மையும் சத்தியமும் இருக்க வாய்ப்பில்லை... ‘சூட்சுமமாக ஒன்றை உணரத் தெரிய வேண்டும்’ என்பது பிராந்தர் சிந்தனை. பிராந்தர் எளிய தோற்றம் கொண்டிருந்தார்... இடையில் ஒரு துண்டுதான் அவரது ஆடை. அலங்காரத்தில் உடம்பை அழகாகப் பேணுவதில் அவருக்கு உடன்பாடு இல்லை.
அப்படிச் செய்யும் பட்சத்தில் நாம் சமூகம் என்னும் வலைக்குள் அதற்கு கட்டுப்பட்டவர்களாகி விடுகிறோம். அதுதானே உண்மை?
இன்று நாம் வண்ண வண்ணமாய் உடை உடுத்துவது தங்கநகை அணிவது, தலைவாரி அழகுபடுத்திக் கொள்வது எல்லாம் நமக்காக அல்லவே...?
நம்மை பார்ப்பவர்கள் நம்மை பார்த்து மயங்கிட வேண்டும், வியக்க வேண்டும் என்றெல்லாம் எண்ணித்தானே? குறைந்த பட்சம் அவர்கள் நம்மை வெறுத்து ஒதுக்கி விடக் கூடாது என்றால் ஒரு வேட்டி, துண்டாவது அணிய வேண்டும் என்பது தானே இன்றைய நமது வாழ்க்கை நிலை?
ஒரு சமுதாய வாழ்க்கை என்பது இப்படித்தான் இருக்கும்; இதில் எளிமையாக இருந்தால் வறியவன் என்று அதற்குரிய மதிப்பை அளிப்பார்கள். செழிப்போடு அலங்காரமாக இருந்தால் செல்வந்தன் என்று சுற்றிச் சுற்றி வருவார்கள்.
வறுமையும் சரி, செல்வமும் சரி மனிதனை பாதிக்கிறது. இதனால் ஏதோ ஒரு வகையில் தூண்டப்பட்டு மனிதனும் பதில் வினை செய்கிறான். அந்த பதில் வினைதான் பற்று, பாசம் என்று மெல்ல வளர்ந்து, மனிதனை துளியும் கடைத்தேற விடாமல் செய்து விடுகிறது.
எனவேதான் சித்த புருஷர்கள் சமுதாயம் தன்னை மதிப்பாகப் பார்ப்பதையும் சரி, இழிவாகப் பேசுவதையும் சரி பொருட்படுத்துவதேயில்லை. எனவே உடம்பை அலங்காரமாகப் பேணுவது என்றில்லாமல் அதை ஒரு சுமையாகக் கருதி அதற்காக மூன்று வேளை உண்ணுவதைக் கூட குறைத்துக் கொண்டு இருவேளை, ஒருவேளை பிறகு மூன்று நாளைக்கு ஒருவேளை என்று உடம்பை ஜெயித்தவர்களாக அவர்கள் விளங்கினார்கள்.
பிராந்தரும் அப்படித்தான்!
மலையாள நாட்டில் வாழ்ந்த இவர் செய்யும் செயல்கள் ஊராருக்குத் துளியும் விளங்காது. ஒருவரும் அவரிடம் போய், ஏன் இப்படிச் செய்கிறாய் என்று கேட்டதே இல்லை. அவரைப் பார்த்தாலே ‘பைத்தியம் வருகிறது’ என்று ஒதுங்கிப் போனார்கள்.
அவரோ, திடீரென்று ஓடுவார். ஆடுவார். குதிப்பார், தலைகீழாக நிற்பார். எங்காவது கூழாங்கல் கிடந்தால் அதை சிவலிங்கமாகக் கருதி பூஜிப்பார். பின் அதை அப்படியே தூக்கி ஆற்றில் போட்டு விடுவார்.
இப்படித்தான் கற்கள் சிலவற்றை உருட்டிக் கொண்டு பக்கத்து மலை உச்சிக்குச் செல்வார்... பின் அங்கிருந்து அதை உருட்டி விடுவார்.
தனக்குத் தோன்றும் போதெல்லாம் அருகில் உள்ள புழாவில் போய் அப்படியே விழுவார். அப்படியே ஈரம் கொட்டச் சொட்ட எழுந்திருந்து பிச்சைக்குச் செல்வார். சோறு போட்டால் வாங்க மாட்டார். அரிசியை மட்டும் வாங்கி வந்து ஆற்றோரமாக பானையில் வைத்துச் சமைப்பார். சமைத்ததை தான் சாப்பிட்டது போக மீதம் உள்ளதை காக்கை, குருவிகளுக்குப் போடுவார்.
அவர் அருகில் அவை துளியும் அச்சமின்றி வந்து அவர் மேல் அமர்ந்து, அவர் ஊட்டிவிட அவையெல்லாம் உண்ணும்.
அந்தக் காட்சியைக் காணும் சிலர் மட்டும், பிராந்தரிடம் ஏதோ சக்தி இருப்பதாகக் கருதினர். மெல்ல அவரை அணுகி அவரிடம் பேச ஆரம்பித்தனர். ‘‘எடுப்பதோ பிச்சை.. இதில் காக்கை, குருவிகளுக்கும் சோறு போட வேண்டுமா? அதை அப்படியே வைத்திருந்து நாளை உண்ணலாமே...’’ என்று ஒருவர் கேட்க, அவரைப் பார்த்து முறைத்த பிராந்தர், ‘‘நாளை என்ற ஒன்று இருப்பதாக எண்ணி இன்று இருக்கின்ற நேரத்தில் சந்தோஷமாக வாழத் தெரியாதவர்கள் நீங்கள்... சித்தனுக்கு வாழும் காலம் மட்டுமே கணக்கு..’’ என்றார்.
‘‘அப்படியானால் எதிர்காலம்?’
‘‘நிகழ்காலம் தான் நேற்றில் முடிந்து இன்றில் கிடந்து நாளை என நீள்கிறது. இன்று இருப்பதுதான் நம் கையில்... அதில் அர்த்தமுடன் வாழ்ந்து விட்டால் அதுவே நேற்றாகி, பின் அர்த்தமுடன் நேற்று வாழ்ந்ததாகி இன்றும் அது நீண்டு நாளையும் அப்படியே தொடரும். இன்று செய்வதே நாளை திரும்புகிறது. எனவே இன்று அவரவர் லட்சியப்படி வாழ்வதே உசிதம்.’’
‘‘பிச்சை எடுப்பது கேவலமில்லையா?’’
‘‘அது தர்மம் புரியத்தூண்டும் உன்னதச் செயல்.. சுயநலத்தோடு நாளைக்கு என்று எடுத்து வைத்துக் கொள்வதுதான் கேவலம்.’’
‘‘எச்சரிக்கையாகச் சேமித்து வைப்பது எப்படி கேவலமாகும்?’’
‘‘எச்சரிக்கை என்பது பயத்தின் இன்னொரு பரிமாணம். இந்த உலகம் எந்த உயிரினத்தையும் கைவிட்டதில்லை. சாலை ஓரம் முளைக்கும் புல்லுக்குக் கூட இறைவன் மழையை அனுப்பி உணவைத் தந்து விடுகிறான். புழு, பூச்சிகள் கூட உணவிருப்பதால்தான் வாழ்கின்றன. அவை நாளை என்ற ஒன்றை எண்ணி எதையும் இன்றே எடுத்து வைத்துக் கொள்வதில்லை.’’
‘‘சம்பாதித்த பணத்தில் சேமிப்பது தவறா?’’
‘‘இல்லாமல் போய்விடும் என்கிற எண்ணமே சேமிப்புக்கு அடித்தளம். இப்படி அச்சமூட்டும் பலவீனமான அடித்தளத்தில் இருந்து செய்யப்படும் எதுவும் சரியானதன்று.’’
இப்படி அவரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர் தந்த பதிலில் பல புதிய கோணங்கள்_ இவரா பார்ப்பதற்கு இப்படி பைத்தியம் போல எண்ண வைக்கிறார்! என்று பலரை பிரமிக்க வைத்தது. ‘‘அது சரி... இவ்வளவு தெளிவாகப் பேசும் நீங்கள் ஏன் இப்படி கற்களை எடுத்துப் போய் மலை ஏறி பின் மேலிருந்து உருட்டி விடுகிறீர்கள்... வேண்டாத வேலையில்லையா இது?’’
‘‘எது வேண்டாத வேலை? எதையும் ஆக்குவது கடினம். அழிப்பது சுலபம் என்பதை உணர்த்தவே நான் இவ்வாறு செய்கிறேன். அப்படிச் செய்யும்போது எனக்கும் ஞாபகப்படுத்திக் கொள்கிறேன்.’’
‘‘இல்லாவிட்டால் புரியாதா.. மறந்து போய்விடுமா? இதற்கு அக்கடா என்று சும்மா இருப்பது மேலல்லவா?’’
‘‘அப்படி வா வழிக்கு... நான் சும்மா கிடந்தால் சோம்பேறி என்பாய். இப்படிச் செய்தாலோ சும்மா இருப்பது மேல் என்பாய். எதையும் ஒப்பிட்டுப் பார்த்து சிந்திப்பதுதான் மானுட புத்திக்குப் பழக்கம். நான் அதை ஜெயிக்க விரும்பும் சித்தன். என் செயல்களை வைத்து உன்னால் என்னை எடைபோட முடிந்தால் நான் உங்களில் ஒருவன். முடியாத பட்சத்தில் உங்கள் கூட்டத்தில் இருந்து தப்பி சுதந்திரம் பெற்று விட்ட ஒருவன். நான் சுதந்திரனாக இருப்பதுதான் என் ஆன்மாவுக்கு நான் அளிக்கும் பரிசாகும். என்னைப் புரிய முயலாதே.. அது வீண் ஆகும்.’’
இப்படி, அவர் சொன்னதெல்லாம் எத்தனை பேருக்குப் புரிந்ததோ? புரிந்தவர்கள் அவரை வணங்கி அவரைப் பற்றி பேசத் தொடங்கினர். ஆனால் பிராந்தர் தனக்கென மடமோ, சீடர் குழாமோ இருப்பதை விரும்பவில்லை. அதுகூட ஒரு தளை என்றும்; ஒரு கட்டுப்பாட்டை உருவாக்கி உண்மையான அறிதலுக்குத் தடையாகி விடும் என்றும் கருதினார். எனவே எவருக்கும் தன் அருகில் இடம் கொடுக்கவில்லை. ஆனால், கேள்விகளை வர
வேற்றார். நறுக்குத் தெறித்த மாதிரி பதில் கூறினார்.
பகலில் இப்படி பைத்தியமாக ஊரைச் சுற்றும் பிராந்தர் காளிதேவியையும் தரிசித்தவர் என்பதுதான் சிறப்பு. காளி என்பவள் ரௌத்ரசொரூபி. மயானத்தில் உறைபவள்.
இவளது உருவம் பார்த்தாலே பயத்தைத் தரவல்லது... இதனால் மயானப் பக்கமே செல்ல மக்கள் கூட்டம் அஞ்சிக்கிடந்தது.
ஆனால், பிராந்தர் அச்சத்தை துச்சமாய்க் கருதியவர், இரவானால் மயானத்தில்தான் படுத்து உறங்குவார். ஓர் இரவு அவர் உறங்கும் சமயம், காளிதேவி அங்கு பிரசன்னமாகி அச்சமில்லாத பிராந்தனைப் பார்த்து வியந்து, அவரை எழுப்பி தன் கொடூர ரூபத்தைக் காட்டினாள்.
பிராந்தரோ, ‘‘என்னை பயமுறுத்தி உனக்கு ஆகப்போவதென்ன.. எதற்கு இந்த ஆங்காரம்? என்வழியில் ஏன் குறுக்கிடுகிறாய்?’’ என்று சாதாரணமாக திருப்பிக் கேட்க, காளிதேவிக்கே என்னவோ போலாகி விட்டது.
அடுத்த நொடியே சாந்த ரூபமாய் மாறியவள், ‘‘நீ அசாதாரணன். உலக மாயையை முற்றாய் வென்றவன்’’ என்று பிராந்தரைப் போற்றி, ‘‘உனக்கு என்ன வரம் வேண்டும்?’’ என்று கேட்டாள். பிராந்தரோ ‘‘இப்பொழுது எனக்கு ஒரு குறையும் இல்லை. அப்படி இருக்க எனக்கு எதற்கு வரம்?’’ என்று திருப்பிக் கேட்க, காளிதேவிக்கு ஏற்பட்ட வியப்புக்கு அளவில்லை.
‘‘அப்பனே... உனக்கு ஏதாவது நான் தந்தே தீர வேண்டும்?’’ என்று அவரது கால்களைப் பார்த்தாள்.
அதில் ஒன்று பருத்து வீங்கி யானைக்காலாகியிருந்தது.
‘‘இந்த யானைக்காலை நான் குணப்படுத்தட்டுமா?’’ என்று கேட்க, ‘‘வேண்டாம்’’ என்று பிராந்தர் கூறவும், காளியிடம் திகைப்பு.
‘‘வேண்டாமா?’’
‘‘ஆமாம்.. வேண்டாம். இது வருவதற்கு என் வினைதான் காரணம். அது நான் அனுபவிக்க அனுபவிக்கவே தீரும். நான் அனுபவித்தே அதைத் தீர்த்து விடுகிறேன்’’ என்றார்.
‘‘என் அருளால் நீ அதை வெல்லலாமே?’’
‘‘அதைவிட அனுபவித்துத் தீர்ப்பது மேல் என்பது என் அபிப்ராயம்..’’
‘‘நீதான் உண்மையான சித்தன்... தர்மத்தையே தர்மம் செய்பவனைத்தான் தர்மன் என்கிறோம். அதேபோல், அருள்கூட ஒரு வகையில் மயக்கமூட்டி கர்வப்பட வைப்பது என்கிற அளவு சிந்தித்து துன்பத்தை நேசிக்கும் நீயே உண்மையான அச்சமற்றவன். உன்னிடம் நான் தோற்றுவிட்டேன்’’ _ என்று கூறி காளி மறைந்துவிட்டாள்.
இப்படி எது சித்தம் என்பதற்கு இலக்கணம் கூறியவர் பிராந்தர்!
 
  Today, there have been 13 visitors (118 hits) on this page! View Full Moon Day Time table  
 
மனதைத் திறந்து வைத்திரு. நீ அறிந்ததைவிட பெரிய விடயம் ஒன்று இங்கு நடந்துகொண்டிருக்கிறது This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free