மிகவும் இருண்டிருந்தால் உன்னால் நட்சத்திரங்களின் ஒளிக்கீற்றைப் பார்க்க முடியும்..
   
  வராகி சித்தர்
  திருமூலர்
 
பொதுவில் சித்த புருஷர்களின் பாடல்களில் மறைபொருள் அதிகம் இருக்கும். அவ்வளவு சுலபமாக விளங்கிக் கொள்ள இயலாது. மூலிகை ரகசியங்களை, சித்திகளுக்கான வழிமுறைகளை வார்த்தைகளுக்குள்ளேயே ஒளித்து வைத்து விடுவார்கள்.
யாருக்கு பிராப்தி உள்ளதோ அவரே அதை சரியாக அறிந்து கொள்வார். ஆனால், திருமூலர் இவர்களில் மிக மாறுபட்டவர். இவரின் திருமந்திரம் தமிழுக்கு அணி செய்யும் நூல்களில் முன்னிலையில் இருக்கும் ஒன்றாகும். பாமரரும் விளங்கிக்கொள்ள முடிந்த அளவில் இவரது கருத்துகள் இருப்பதுதான் மிகப் பெரிய ஆச்சரியம்.
‘அன்பே சிவம்’ என்பது மிக எளிய, அனைவரும் உணர்ந்த, ஒரு தத்துவம். இதை முதலில் உதிர்த்தவர், திருமூலர்தான்.
‘அன்பு சிவம் இரண்டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவது அறிகிலார் ஆரும்’
என்கிற இவரது பாடல் வரிகளால் இதை உணரலாம். அதேபோல இவரது இன்னொரு வாசகம்தான் ‘ஒன்றே குலம் _ ஒருவனே தேவன்’ என்பதும்.
தமிழாய்ந்த புலவர்கள், தேவார _ திருவாசகத்தை விடவும் மிக அதிகம் வியந்தது திருமூலரின் திருமந்திரத்தை எண்ணித்தான்.
வேளாளர் மரபில் வந்தவராகக் கருதப்படும் திருமூலரின் இயற்பெயர், சுந்தரன் என்பதாகத் தெரிகிறது.
இந்த சுந்தரனுக்கு, கயிலாயத்தில் இறைவன் பரமனுக்கு வாகனமாயும் கயிலயம் பதிக்கே காவலாகவும் உள்ள நந்திதான் குரு.
நந்தியிடம் உபதேசம் பெற்று யோகமார்க்கத்தில் புகுந்த சுந்தரன், கயிலையிலிருந்து புறப்பட்டு பொதிகைக்கு சென்று அகத்தியரை தரிசிக்க விரும்பினார். அப்படியே பூ உலகில் எங்கெல்லாம் இறைவன் _ இறைவியின் அர்ச்சாரூபமும், ஆகமச் சிறப்பும் உள்ளதோ அங்கெல்லாம் சென்று வழிபாடு செய்ய தீர்மானித்தார்.
எல்லோரும் பூவுலகில் வழிபட்டு கயிலையை அடைந்து இறைவனோடு கலப்பார்கள். இதுதான் உயிர்களுக்கான மோட்ச விதி. திருமூலர் இவர்களில் வேறுபட்டதுதான் ஆச்சரியம்.
காரணம், நந்தியெம்பெருமானிடம் பெற்ற உபதேசமும், கயிலாயத் தாக்கமும் மானுட வாழ்வை நெறிப்படுத்த அவருக்குள் தூண்டுதலை ஏற்படுத்தின.
இறைவனது திருவுள்ளமும் அதுதான்!
அதனாலேயே சுந்தரனின் பயணமும் பொதிகை, ஸ்ரீசைலம், காளஹஸ்தி, வாரணாசி என்று புனித தலங்களை நோக்கி அமைந்தது. அப்படியே சிதம்பரம் வரை வந்துவிடும் சுந்தரன், திருவாவடுதுறை பக்கமாய் வான்வழியே பயணிக்கிறார்.
கயிலாய பரம்பரையில் வரும் சுந்தரனுக்கு அட்டமாசித்தியெல்லாம் மிக எளிதாக வசப்பட்ட ஒரு விஷயம். அதில் ஒன்றுதான் இலஹிமா எனும் ஆற்றல். இந்த ஆற்றலால் பஞ்சு போல ஆகி மிதந்து திரிய முடியும். எனவே பறவை போல பறப்பதோ, நீர் மேல் நடப்பதோ எல்லாம் பெரிய விஷயங்களே இல்லை.
திருவாவடுதுறையை ஒட்டிய ஒரு கிராமத்தில், மூலன் என்னும் மாடு மேய்ப்பவனைக் காண்கிறார் சுந்தரன்.
குழலெடுத்து ஊதியபடியே கோகுலத்து கண்ணன் போல அவன் மாடுகளை ஒன்று கூட்டி மகிழ்விக்கும் விதம் அவரை ஈர்க்கிறது. அப்பொழுது அவர் பார்க்க, ஒரு சர்ப்பம் மூலனைத் தீண்டிட, மூலன் இறக்கிறான்.
மாடுகள் பரிதவிக்கின்றன.
சில மாடுகள் திசை தெரியாமல் பிரிந்துசெல்ல முயல, கன்றுகள் தாய்ப்பசுவை பிரிந்து தேம்பி அழப்பார்க்கின்றன.
பூவுலக சஞ்சாரத்தில் சுந்தரன் கண்ட காட்சி மனதை நெகிழ்விக்க, உடனடியாக அந்த ஆவினத்திற்கு அன்பு மழை பொழிய தீர்மானிக்கிறார், சுந்தரன்.
அட்டமாசித்திகளில் ஒன்றான பரகாயப் பிரவேசம் எனும் கூடுமாறும் வித்தை கை கொடுக்கிறது. தனது உடம்பை, அந்த மாடுகள் மன்றாடியபடி இருக்கும் கிராமத்து மலைக் குகையில் உதிர்த்து விட்டு, சூக்கும உடம்புடன், மூலன் உடல் கிடக்கும் இடத்திற்கு வந்து, அவன் உடம்புக்குள் புகுகிறார். இங்கிருந்துதான், சுந்தரன் _ திருமூலன் ஆக மாறுகிறார்.
மாடுகளும் மகிழ்கின்றன. அன்போடு வீடு திரும்பி பட்டியிலும் அடைபடுகின்றன. திருமூலருக்குள்ளேயும் ஒரு நிறைவு. ஆனால், பூவுலகில் விதியின் வலிமையை சுந்தரனாகிய திருமூலர் உணர வேண்டுமே...?
மூலன் மனைவி, திருமூலரை தன் கணவன் என்று எண்ணி தீண்டப் பார்க்கிறாள். அவளது கற்புக்கு தன்னால் ஊறு வந்துவிடக் கூடாது என எண்ணி, அவளை தவிர்க்கிறார். அப்படியே தத்துவங்களையும் உதிர்க்கத் தொடங்க, அவள் திகைத்துப் போகிறாள்.
அவள் வரையில் குழப்பமே மிஞ்சுகிறது. தன் கணவனுக்கு ஏதோ ஆகிவிட்டதாக அவள் கருத, திருமூலரும் தாமதியாமல் நடந்ததைக் கூறி இந்த உடல்தான் உனக்கு சொந்தம், உயிரல்ல என்கிறார்.
அவளோ நம்ப மறுக்கிறாள். தன் உறவினர்களையும் ஊர்ப் பெரியவர்களையும் கூட்டி நியாயம் கேட்கிறாள். அவர்களிடமும் நடந்ததைக் கூறிடும் திருமூலர், தன் கூற்றை நிரூபிக்க, தனது உடல் கிடக்கும் மலைக் குகைக்கு அவர்களுடன் செல்கிறார். ஆனால் அங்கே உடல் இல்லை. அந்த குகைக்குள் அடங்கும் ஒரு கொடிய மிருகம் தின்றுவிட்டிருக்கிறது. (இறைவனே உடலை மறைத்துவிட்டார் என்பது சேக்கிழாரின் பெரிய புராணத்தால் தெரியவருவதாம்). திருமூலருக்கு திகைப்பாகிறது. தன் சித்த தேகம் போய்விட்டது. உற்ற தேகமோ கர்மத்தால் வந்தது. அதனுள் புகுந்தது கருணை நிமித்தம் என்றாலும், பூவுலகின் விதிப்பாட்டை மீறிய ஒரு செயல் அது. இயற்கைக்கு மாறாக நமது சக்தியைப் பிரயோகிக்கும்போது, இப்படியெல்லாம் சிக்கல் எழும் என்பதை அந்த நொடியில் ஒரு ஞானமாய் உணர்கிறார் திருமூலர். அவரது இக்கட்டைக்கண்டு ஊரும், மூலன் மனைவியை சமாதானம் செய்து ‘உன் கணவன் இனி துறவி.. நீ உன் மனதை சமாதானப்படுத்திக் கொள்வதுதான் ஒரே வழி!’ என்கிறது.
அதன்பின் திருமூலர், உலகின் கர்ம துயரங்கள் குறித்து சிந்திக்கத் தொடங்குகிறார். மாயையின் சக்தியையும் விளங்கிக் கொண்டு தன் தெளிவை பாடல்களாக்குகிறார்.
மொத்தம் எட்டாயிரம் பாடல்கள்!
மலைப்பாயிருக்கிறதா? அவ்வளவும் அற்புதமானவை. சிற்பசாத்திரம், சோதிடம், மாந்திரீகம், தீட்சை விதி, யோகஞானம், ஆறாதாரம் என்று பல தலைப்புகள்.
இவற்றுள், திருமந்திரம் தனிச்சிறப்புடையது. இது, நாயன்மார்கள் பாடிய திருமுறைகளின் வரிசையில் பத்தாம் திருமுறையாக போற்றப்படுகிறது.
மனித வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாக மட்டும் இல்லாமல், ‘தந்திரம்’ என்கிற தலைப்பில் முதல் தந்திரம் இரண்டாம் தந்திரம், மூன்றாம் தந்திரம், என்று இவர் விவரிக்கும் பாங்கு விசேஷமானது.
இதில் நான்காம் தந்திரம் என்பது, உபாசனை புரிபவர்களுக்கு பெரிதும் வழிகாட்டக் கூடியது. இதில்தான் சக்கரங்கள் ஆகிய யந்திரங்கள் பற்றியெல்லாம் பேசுகிறார்.
ஒன்பதாம் தந்திரம், யோகியர்களின் சமாதி பற்றியும், சூட்சம உடம்பு பற்றியும் விளக்குகிறது.
இவரைப்பற்றிய இன்னொரு கதையும் காணக்கிடைக்கிறது. கயிலாயம் விட்டு வான்வெளியில் பூ உலக சஞ்சாரம் மேற்கொண்ட வேளையில், வீரசேனன் எனும் அரசன் ஒருவன், கர்ம வினை காரணமாக அகால மரணமடைகிறான். அதனால், அவனது மனைவியான அரசி உட்பட நாடே ஸ்தம்பித்துப் போகிறது. காரணம், அந்த அரசனின் நெறி தவறாத அரசாட்சி முறை. இதைக் கண்டு, சுந்தரனாகிய திருமூலர் மனம் கசிகிறார்.
நாட்டு மக்களின் துக்கத்தை நீக்கிட திரு உள்ளம் கொண்டு, தன் உடலை ஒரு மரப்பொந்தில் உதிர்த்து விட்டு, அரசன் உடலுக்குள் புகுந்து வீரசேன திருமூலராக எழுகிறார். அதன்பின் நாடே ஆனந்தமயமாகிறது. அப்படியே அரசியிடம் கற்பின் வழி காமத்தால் சிக்கல் ஏற்படுகிறது. அவளிடம், தான் யார் என்பதை கூறிவிடுகிறார்.
அரசி முதலில் அதிர்ந்தாலும் பின் சமாதானமாகி அவருடன் தொடர்ந்து வாழவே முடிவு செய்கிறாள். ஏன் என்றால், அரசன் கூடுமாறிப் புகுந்த ஒரு யோகி என்பது வெளியே தெரியவந்தால், அரச உரிமைகளில் குழப்பம் ஏற்பட்டு அவளது உரிமை பறிபோய்விடும் அபாயம் ஏற்படக்கூடும். எனவே சுயநலத்தோடு சிந்திக்கும் அவள், அரச வடிவில் உள்ள திருமூலரிடமே விசாரித்து, அவரது உடல் ஒரு மரப்பொந்தில் இருப்பதை தெரிந்து கொண்டு அதை அழித்துவிடவும் தயாராகிறாள்.
சித்த தேகம் என்பது அவ்வளவு சுலபத்தில் பஞ்ச பூதங்களால் அழிக்கப்பட முடியாத ஒன்றாகும். அதை என்ன செய்தால் அழிக்கலாம் என்பதும் அவர்களுக்குதான் தெரியும்.
அரசியும் அதைக் கேட்டறிந்து, அவரது உடம்பை எரித்து விடுகிறாள். உடம்பைத் தேடிச் சென்ற திருமூலர், உடம்பு அழிந்தது அறிந்து அரசியைக் கோபித்தவராக நாட்டை விட்டே வெளியேறுகிறார்.
அரசிக்கோ முதலுக்கே மோசம் வந்துவிட்டது. இந்நிலையில்தான், திருவானைக்காவலில் உள்ள ஜம்புலிங்கேஸ்வரரின் பெயரையே தனது பெயராகக் கொண்ட வேதியன் ஒருவனின், இறந்துவிட்ட உடலைக் காண்கிறார்.
குருவின் துணையின்றி தன்முனைப்பாக, யோகப் பயிற்சி செய்தவன் இந்த ஜம்புலிங்கேஸ்வரன். குறிப்பாக, சுவாசப் பயிற்சியின் போது, கும்பக முறையை சரியாகச் செய்திடாமல் அதனுள் சிக்கி உயிர் மூச்சை இழந்து விட்டவன்...
அந்த உடம்பைக் காணும் திருமூலருக்கு அரசனின் போக உடம்பை விடவும் இந்த யோக உடம்பு உயர்வானது என்கிற எண்ணம் ஏற்படுகிறது. எனவே, அரச உடலை ஒரு மரத்தில் உதிர்த்துவிட்டு அதை யாரும் காணாவண்ணம் மண்ணையும் இலை தழையையும் போட்டு மூடி, சூளைச் செங்கற்களை பூசுவது போல பூசி மெழுகி விடுகிறார்.
அப்படியே அதற்கு இடம் கொடுத்த அந்த விருட்சத்தை பார்த்து, ‘விருட்சமே... யோக மோகம் எனும் இரண்டிலும் சஞ்சரித்து இறந்தும் உயிர் பெற்ற சரீரம் இது. இதை நீ என் பொருட்டு ஏற்றுக் கொண்டாய். இதன் விளைவாக, உனக்கும் உயிர்ப்பிக்கும் சக்தி ஏற்பட்டு, அரசனுக்கு இடம் கொடுத்ததால் அரச மரமாகி அவனியில் சிறப்பாய்’ என வாழ்த்துகிறார்.
இப்படித் திருமூலரால் தீண்டப்பெற்று தன்னுள் ஒரு ஜீவ மாற்றம் பெற்ற மரமே அரசமரமாகும் என்பர். அதன்பின், ஜம்புலிங்கேஸ்வரன் உடம்பில் புகுந்த திருமூலர், தான் பூ உலகில் இப்படி உடம்பால் படும் பாட்டை உணர்ந்தும், அதிலிருந்து முக்தி பெறும் நிலையை அடையவும், தான் பெற்ற உபதேசக் கருத்துகளாலும், பூ உலக அனுபவங்களையும் கருத்தில் கொண்டு, பாடல்கள் செய்தார். இவர் கூறாத விஷயமே இல்லை எனும் அளவிற்கு அவை நமக்கு இன்னும் வழி காட்டியபடி உள்ளன.
பொதுவில், மானிடப் பிறப்பெடுத்த ஒருவர் மெல்ல அதிலிருந்து விடுபட்டு சித்த நிலைக்குச் செல்வார். ஆனால், திருமூலர் விஷயமே தலை கீழானது. அவர் சித்த நிலையிலிருந்து மானிட நிலைக்கு வந்து எல்லாவித வாழ்க்கைப்பாடுகளையும் அனுபவித்து அறிந்து தன் அனுபவ சாரமாகவே பாடல்களை உலகுக்குக் கொடுத்தவர்.
திருமூலர் பற்றி சிந்தித்தால், இப்படி நிறைய சிந்திக்கத் தோன்றும். அப்படியே நம் பழம் பெருமைதான் எத்தனை வலியது என்றும் தோன்றும்
 
  Today, there have been 3 visitors (3 hits) on this page! View Full Moon Day Time table  
 
மனதைத் திறந்து வைத்திரு. நீ அறிந்ததைவிட பெரிய விடயம் ஒன்று இங்கு நடந்துகொண்டிருக்கிறது This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free