மிகவும் இருண்டிருந்தால் உன்னால் நட்சத்திரங்களின் ஒளிக்கீற்றைப் பார்க்க முடியும்..
   
  வராகி சித்தர்
  தேரையர்
 
தேரையர், சித்தர்களின் கூட்டத்தில் மிகவும் தனித்துத் தெரியும் ஒருவராவார்.
இவர் அளவுக்கு சோதனைகளைச் சந்தித்த ஒரு சித்த புருஷரைப் பார்ப்பது அரிது. சோதனைகளே இவரை சாதனையாளராக ஆக்கின. மனித வாழ்வில் போட்டி, பொறாமை, மன எரிச்சல், ஆகியவை சராசரி மனிதர்களின் குணங்கள். ஆனால் தேரையர் வரலாற்றைப் பார்க்கும் போது, சித்த புருஷர்களால்கூட போட்டி, பொறாமை போன்றவற்றை வெல்ல முடியாது போலும் என்று நாம் எண்ண வேண்டியுள்ளது.
தேரையர் என்பது, காரணப் பெயர். உண்மையில் இவரது இயற்பெயர், ராமதேவன் என்கிறது, அபிதான சிந்தாமணி. ராமதேவனின் ஞானகுருவின் பெயர் தர்மசௌமினி. அவர் ஒரு சித்தரல்லர், முனிவர்! சித்தர் வேறு, முனிவர் வேறா? என்று கேட்கலாம்.
ஆம்!
முனிவர்கள் வேதவழி நடப்பவர்கள். மந்திர உபதேசம் பெற்று யாகம் வளர்த்து வரம் பெற உழைப்பவர்கள். தர்மநெறிதான் இவர்கள் நெறி_ஆயினும் பெயர் புகழ் விளங்க வேண்டும் என்று எண்ணுபவர்கள். ஆனால், சித்தர்கள் இவர்களில் பெரிதும் மாறுபட்டவர்கள். வேதங்களை இவர்கள் ஒரு பொருட்டாகக் கருதத் தேவையில்லை. இவர்களுக்கு உள்ளம்தான் கோயில்_ உடம்புதான் ஆலயம். உடம்பை வளர்த்து அதன் வழி உயிரையும் வளர்ப்பவர்கள். வரங்களுக்காக தவம் இயற்றுவது இவர்கள் செயலல்ல. தன்னையறிந்தாலே போதும், தானாக தெய்வமறியும் நிலை வந்துவிடும் என்பது இவர்கள் சித்தாந்தம்.
குறுகிய காலத்திலேயே, ராமதேவன் ஒரு சித்தயோகி என்பதையறிந்து, தன்னிடம் இருந்தால் காலம்தான் வீணாகும் என்பதை உணர்ந்து கொண்டுவிட்டார்.
காரணம், தர்மசௌமினியிடம் ராமதேவன் கேட்ட கேள்விகள் அப்படிப்பட்டவை.
‘‘குருதேவா..... ஆதிசக்தியிடம் வரம்வேண்டி தவம் செய்கிறீர்கள். இடையில் சூரியதேவனுக்கு ஒரு தனி வணக்கமுறை, பரிவார தேவதைகளுக்கு ஒரு தனி வணக்கமுறை; பின் இறுதியாக மூல இறைசக்தியிடம் வேண்டல் என்று, உங்கள் தவ நெறியில் பல கிளைகள். நமக்கெல்லாம் மேலான ஒரு சக்தி ஆதிசக்தி என்றால், அதைப் படைத்தது யார்? ஒன்று இருக்கிறது என்றால், அதை ஒருவர் படைத்திருக்க வேண்டுமல்லவா? தானாக ஒன்று எப்படி உருவாக முடியும்?’’
என்று பலவிதமாக ராமதேவன் கேட்ட கேள்விகள், தர்மசௌமினியை திணறடித்துவிட்டன.
‘‘ராமதேவா.... உனக்கான பதிலை அகத்திய முனிவரால்தான் தரமுடியும். அவர் ஒருவர்தான் முனிவருக்கு முனிவர்_சித்தருக்கு சித்தர்’’ என்று தர்மசௌமினி, ராமதேவனுக்கு வழிகாட்ட, ராமதேவனும் அகத்தியரின் பாதங்களில் போய் விழுந்து மாணாக்கராய் ஏற்றுக்கொள்ளச் சொன்னார்.
ஆனால், அகத்தியர் அவ்வளவு சுலபத்தில் சம்மதிக்கவில்லை. தர்மசௌமினி காரணம் இல்லாது ராமதேவனை தன்னிடம் அனுப்பவில்லை என்பதைத் தெரிந்துகொண்ட அகத்தியர், ராமதேவனை சற்று எட்டவே நிறுத்தி, அவரை சோதிக்க ஆரம்பித்தார்.
உண்மையில் சித்தஞானம் பெற விரும்பும் ஒருவன் அலட்சியம், அவமானம் முதலியவற்றைச் சந்தித்து அதில் தேறி, பொறுமையுடன் திகழ்ந்தாலே அவனால் அநேக நுட்பங்களை விளங்கிக்கொள்ள முடியும். சராசரி புத்தி உள்ளவர்கள் அலட்சியப்படுத்தப்படும்போதே பதிலுக்கு அலட்சியம் காட்டி ஓடிவிடுவார்கள்.
உண்மையான ஞானிகள் எவ்வளவு தடைவந்தாலும், அலட்சியப்படுத்தப்பட்டாலும், தொடர்ந்து குருபக்தியோடு பொறுமையாக இருப்பர்.
ராமதேவனிடமும் கொஞ்சம், ‘நான்’ இருந்ததாலேயே அகத்தியர், அவரை சற்று தூரத்திலேயே நிறுத்தினார். இருப்பினும், ராமதேவன், அகத்தியரின் வைத்திய ஞானம் முழுவதையும் ஈடுபாட்டுடன் கற்றுத் தெளிந்து விட்டார். சொல்லப் போனால், அவர் குருவை வெல்லும் ஒரு சிஷ்யன் என்கிற அளவிற்குத் தேறிவிட்டார். இப்படித் தேறியதாலேயே காலமும் இவரை தேரையர் ஆக்க ஒரு நல்ல சந்தர்ப்பத்தை அளித்தது.
காசிவர்மன் என்று ஓர் அரசன். கடுமையான தலைவலியால் நிம்மதியை இழந்து விட்டான். அரண்மனை வைத்தியர்களால் அரசனின் தலைவலியில் அணுவளவைக்கூட குறைக்க முடியவில்லை.
இறுதியாக, விஷயம் அகத்தியர் காதுகளுக்குப் போனது. தனது சிஷ்யர்களுடன் அவரும் காசிவர்மனைச் சந்தித்தார். உச்சந்தலையில், அதாவது கபாலத்தில் குடைச்சல் உள்ளது என்று காசிவர்மன் கூறியதை வைத்து, அவனது வியாதி தலைவலியில்லை என்பதை தீர்மானித்துவிட்டார்.
கபாலத்தில் குடைச்சல் என்றால் கபாலத்தைத் திறந்து பார்த்தால்தான் கண்டறிய முடியும். அனேகமாக கபாலத்தில் வெப்பவாயு,சமயங்களில் மேலேறி பின் அங்கிருந்து வெளியேற வழியின்றி அங்கேயே அடைந்து கிடக்கும். இதுகூட வலியாக வெளிப்படும். அப்படித்தான் ஏதாவது இருக்கும் என்று அனுமானித்த அகத்தியர், காசிவர்மனின் கபாலத்தை ஒருவகை மெழுகைப் பயன்படுத்தி வலியே இல்லாமல் பிளந்துவிட்டார்.
உள்ளே பார்த்தவருக்கு, பலத்த ஆச்சரியம்.
காசிவர்மன் சுவாசிக்கும்போது காற்றோடு காற்றாக உள்ளே நுழைந்துவிட்ட ஒரு தேரைக்குஞ்சு, மூளைவரை சென்று அங்கே அப்படியே பாறைத்தேரைபோல தங்கிவிட்டது. அதனுடைய அசைவுதான் காசிவர்மன் தலையில் வலியாக உணரப்பட்டிருக்கிறது. தேரையை வெளியே எடுத்து கபாலத்தை மூடினால் பிரச்னை தீர்ந்துவிடும். ஆனால் தேரையோ, திறந்த கபாலம் வழியாக வெளிச்சம் பட்டதால் இறுகப் பிடித்துக் கொண்டது. அதைக் குத்தி வெளியே எடுக்கமுனைந்தால், மூளைத்திசுக்கள் பாதிக்கப்படும். இதைத் தவிர்க்க என்ன வழி என்று தெரியாமல் அகத்தியர் தவித்தபோது, ஒரு சிறு பாத்திரத்தில் நீருடன் கபாலம் அருகில் வந்து நின்ற ராமதேவன், அந்த நீரில் அசைவை உருவாக்க... சிறிது நேரத்தில் தேரை மூளையை விட்டுவிட்டு அப்படியே தண்ணீர்ப் பாத்திரத்துக்கு தானாகத் தாவியது. அகத்தியரும் வேகமாக கபாலத்தை மூடி மெழுகிட்டார்.
சீடன் ராமதேவனின் இந்த சமயோசிதச் செயல், அகத்தியரை மகிழச் செய்தது. அதே சமயம், தேரையை வெளியேற்றுவதில் அகத்தியரிடம் பாராட்டுப் பெற்றதால், ராமதேவனும் தேரையர் ஆனார், அதன்பின் அகத்தியர் தன் ஆயுர்வேத வைத்யமுறை அவ்வளவிற்கும் அணுக்க சீடராக தேரையரைத்தான் கருதினார்.
இன்னொரு சம்பவம், தேரையரை வைத்ய சிரோன்மணியாகவே ஆக்கிவிட்டது. பாண்டிய மன்னர்களில் ஒருவனுக்கு முதுகில் கூன் விழுந்துவிட்டது. அதை நீக்கும் வழிவகை தெரியாமல் வைத்ய உலகமே தவித்தது.
தேரையர், அகத்தியர் ஆஸ்ரமத்தில் தற்செயலாக அதற்கான மருந்தைக் கண்டறிந்தார். மூலிகைச்சாறினை சட்டியில் ஊற்றிக் காய்ச்சிய போது அதன் ஆவி சட்டிக்கு நேர் மேல் உள்ள ஒரு வளைந்த மூங்கிலின் வளைமுனையில் பட்டிட, அந்த வளைந்த முனை பட்டென்று வளைவை விட்டு நேர்பட்டது. சப்தம்கேட்டு நிமிர்ந்து பார்த்த தேரையர், அதைப்பார்த்து ஆனந்தத்தில் எகிறிக் குதித்தார்.
மூங்கிலும் மனிதனும் பல விதங்களில் ஒன்றானவர்கள். இரண்டுக்குமே சுவாசம் பொது. இரண்டுமே சத்தம் எழுப்பும். இரண்டுமே உயர்ந்தெழுந்து வளர்ந்து, பின் சாய்ந்து முதுமை அடைபவை. மனிதனோடு மரணத்தின்போது மயானம்வரை வருவது மூங்கிலும்தான்... மூங்கில் மற்ற மரங்களைப் போல என்றும் பசுமையாக இருக்கக்கூடியதும் அல்ல. தனித்தும் இது வளராது. கூட்டமாகவே வளர்வது.
இப்படி மனித வாழ்வுக்கும் மூங்கிலுக்கும் அனேக சம்பந்தங்கள். இந்நிலையில் மூலிகைச் சாறின் ஆவி, வளைமூங்கிலையே நிமிர்த்துகிறது என்றால், இந்தச் சாறு எதைத்தான் நிமிர்த்தாது?
தேரையரும், காய்ச்சிய சாறினை பாண்டிய மன்னனுக்குப் பூசிட, அவனது கூனும் நிமிர்ந்தது. இதனால் அரசன், தேரையரை அகத்தியருக்குச் சமமாக பாவித்தான். இது, அகத்தியரின் மற்ற சிஷ்யர்களுக்குள் பொறாமையை மூட்டியது. அவர்களும் அகத்தியரிடம் கோள் மூட்டினர். அகத்தியரும் தேரையரை அழைத்து, ‘‘இனி உனக்கு என் தயவு தேவையில்லை’’ என்று கூறி, தனித்துச் செயல்படச்சொல்லி அனுப்பிவிட்டார்.
ஆலமர நிழலில் சிறிய தாவரங்களால் வளரமுடியாது. அதேபோல், தேரையர் தன் அருகில் இருந்தால் வளர முடியாது என்று அகத்தியரும் நினைத்தார்.
அவர் எண்ணியது மிகச்சரி. தேரையர் தனித்துச் சென்று பல அரிய மருந்துகளைக் கண்டறிந்தார். தன் முனைப்பை நூலாகவும் எழுதினார். பதார்த்த குணசிந்தாமணி, நீர்க்குறி, நெய்க்குறி சாத்திரம், தைலவருக்கச் சுருக்கம் போன்ற நூல்கள் அவற்றுள் சில.
வைத்திய யமக வெண்பா, மணிவெண்பா மருந்துப்பாரதம் என்றெல்லாம் அவர் எழுதிய நூல்களே, இன்றைய ஆயுர்வேத வைத்தியத்திற்கு அடித்தளமாக இருக்கின்றன.
ஒருமுறை, வயிற்றுவலி வந்த ஒருவருக்கு அகத்தியர் கொடுத்த மருந்தாலும் குணமாகவில்லை. ஆனால் அதே மருந்தை தேரையர் கொடுத்திட, அவருக்கு குணமாயிற்று.
அகத்தியரே, ‘இது எப்படி’ என்று கேட்டு குழம்பி நிற்க, ‘அந்த மருந்தை வாயில் உள்ள எச்சில் மற்றும் பற்களில் உள்ள பாஷாணங்கள் படாமல் வயிற்றில் செலுத்தியதால் வயிற்றுவலி குணமாயிற்று’ என்றார் தேரையர்.
அவரது இந்த நுட்பம் அகத்தியரை பெரிதும் பரவசப்படுத்திற்று. தேரையரின் புகழ், உலகம் முழுவதும் பரவிட திருவுளம் கொண்டார். அதற்கு ஏற்ப ஒரு காலமும் உருவானது. தேரையர், அகத்தியரைப் பிரிந்து நெடுந்தூரம் சென்று தாடியும் மீசையும் வளர்த்து முற்றாக உருமாறிவிட்ட காலம் அது.
அகத்தியருக்கு திடீரென்று கண்பார்வை மங்கியது. அது எதனால் என்பது, திரிகாலஞானியான அகத்தியருக்கும் தெரிந்தது.
பூமியில் மனிதப் பிறப்பெடுத்துவிட்டவர்களை பூமியின் வினைப்பாடுகள், கணக்குத் தீர்த்துக் கொள்ளாமல் விடுவதேயில்லை.
அகத்தியரையும் ஒரு கர்மக்கணக்குதான் கண்ணொளியைக் குறைத்து தடுத்துக் கொண்டிருந்தது. ஆனாலும் அவரது தர்மக்கணக்கு, சீடன் தேரையர் வடிவில் அவரை ஆட்கொண்டது.
அகத்தியர் பரிபூரண கண்ணொளி பெற ஒரு மூலிகை தேவை. அதை எவர் பறித்தாலும் அங்கே விஷப்புகை கிளம்பி, பறித்தவர் பார்வை பறிபோய்விடும். தேரையர், தன் குருநாதரான அகத்தியருக்காக தன் கண்ணை இழந்தாவது முயல்வாரா... இல்லை வேறு மார்க்கத்தில் செல்வாரா என்று அனைவரும் கவனித்தபோது, தேரையரும் அம்பிகையைச் சரண்புகுந்தார்.
அதுநாள்வரை இறைவேட்கையை சிறிதாகவும், மருத்துவச் சூரியனாவதை பெரிதாகவும் கொண்டிருந்த தேரையர், குருநாதருக்காக இறை வேட்கையைப் பெரிதாகக் கருதி அம்பிகையைச் சரண்புகுந்து தனக்கு உதவிடும்படி கண்ணீர் மல்கக் கேட்டார். அம்பிகையும் தேரையரிடம் அகத்தியருக்கான மூலிகையைத் தந்து ஆசிர்வதித்துச் சென்றாள்.
அதன்பின் அகத்தியரின் பார்வையும் முழுமையாகத் திரும்பியது. சீடன் தேரையரை கட்டித்தழுவி கண்ணீர் பெருக்கினார். ‘‘அம்பிகை அருளை நீ பெறவேண்டும் என்பதற்காகவே எனக்கு பார்வைக் குறைவு ஏற்பட்டது’’ என்று கூறிய அகத்தியர், ‘‘நீ சித்தனுக்கு சித்தன். முனிவனுக்கு முனிவன்’’ என்று வாழ்த்தினார்.
மொத்தத்தில், தேரையர் வாழ்வு நுட்பம், விடாமுயற்சி, பணிவு, இறையச்சம் ஆகிய அனைத்துக்குமே ஒரு சான்று போல அமைந்துவிட்டது.
 
  Today, there have been 5 visitors (5 hits) on this page! View Full Moon Day Time table  
 
மனதைத் திறந்து வைத்திரு. நீ அறிந்ததைவிட பெரிய விடயம் ஒன்று இங்கு நடந்துகொண்டிருக்கிறது This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free