மிகவும் இருண்டிருந்தால் உன்னால் நட்சத்திரங்களின் ஒளிக்கீற்றைப் பார்க்க முடியும்..
   
  வராகி சித்தர்
  ராமதேவர்
 
சித்தர்கள் பற்றிச் சிந்திக்கும்போது பாமரர்களுக்குக்கூட சில கேள்விகள் எழும். அதில் பிரதானமானது_சித்தர்கள், கடவுளர்களை நம்புகின்றவர்களா, இல்லையா? என்பதாகும்.
மதச் சின்னங்கள் இல்லாத அவர்களது தோற்றம், ஆடை அணிகளில் கூட அவர்களுக்கு இல்லாத அக்கறை, புதர்போல தாடி மீசை, கசக்கி உடுக்காத அழுக்கு ஆடை, அதுகூட இல்லாத நிர்வாணத் தோற்றம் என்று சிலர் திரிவதைப் பார்க்கும் போது, அவர்களைப் புரிந்துகொள்ள சிரமமாகத்தான் இருக்கும்.
‘நம்பினவர்க்கு நடராசன் நம்பாதவர்க்கு அவன் வெறும்ராசன்’ _என்பதுபோல்தான் சித்தர்கள் பலருடைய தோற்றம், பேச்சு, வாழ்க்கை முறை உள்ளது.
சமுதாயத்தைக் கடைத்தேற்ற வேண்டும், மனித சமூகம் உய்வதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்பட்ட சித்தர்களை விட, சமுதாய எண்ணமின்றி, எல்லாமே மாயை... இதிலிருந்து விடுபட என்ன வழி? என்று சிந்தித்து அதிலேயே உழன்று, பின் வீடுபெற்ற சித்தர்கள்தான் அனேகம்.
அடுத்து, சித்தர்களுக்கு மதங்கள் கிடையாதா? அவர்கள் இந்தத் தமிழ் மண்ணுக்கு மட்டுமே உரியவர்களா? என்பதும் பலருக்குள் தோன்றிடும் கேள்விகளாகும்.
ஏன் என்றால், இந்த உலகம் மிக மிகப் பெரியது.
இதில் நமது மாநிலம் என்பது ஒரு மைப்புள்ளி அளவுதான். அதிலும்கூட நம் ஊர், அந்த ஊருக்குள் ஒரு வீடு, அந்த வீட்டுக்குள் இருக்கும் நாம் கண்ணுக்குப் புலனாகாத தூசியைப் போன்றவர்களே!
இப்படி தூசி அளவு கூட இல்லாத நம்முள் உள்ள ஒரு சித்தர் நமக்கே கூட முழுதாக விளங்கிடாத நிலையில், உலகிற்குப் பொதுவாகி, அனைவரும் அறிந்திடும்படி ஆகிவிட இயலுமா? அல்லது அவரால், இந்தப் பரந்த உலகை விளங்கிக் கொள்ள முடியுமா? என்றெல்லாமும் கேள்விகள் எழுவதைத் தவிர்க்கவே முடியவில்லை.
சாதி, மொழி, மதம், இனம் என்று சுருங்கிக் கிடக்கும் சராசரி மனிதனால் வேண்டுமானால் எல்லைகளைத் தாண்ட இயலாமல் போகலாம்... சித்தர்கள் கூடவா அப்படி? அவர்களுக்கு உலகப் பார்வை இல்லையா? என்றும் கேள்விகள் எழுந்தால், அதில் பிழை இல்லை.
நீர், நிலம், நெருப்பு, ஆகாயம், காற்று இவை எப்படி உலகில் பொதுவாகிப் போனதோ அப்படித் தங்களையும் பொதுவாக்கிக் கொண்டால்தான் ஒருவன் முழு சித்தன். இந்த சித்தனுக்கு அமெரிக்கனும் சரி, அரேபியனும் சரி, இந்தியனும் சரி, யானையும் சரி, பூனையும் சரி, எல்லாமே ஒன்றுதான் என்று, சமரச நோக்கில் வெளிப்படும் கருத்துகளையும் மறுப்பதற்கில்லை.
எல்லாம் சரி... இத்தனை கேள்விகளுக்கும் பதில் சொல்கிற மாதிரி ஒரு சித்தர் இருக்கிறாரா? என்று பார்க்கும் போது அகப்படுபவர்தான், யாக்கோபு சித்தர்.
இவரைப் பற்றி அறிய முயலும்போது பல ஆச்சரியமான தகவல்கள் கிடைக்கின்றன. இவரது காலத்தை திட்டமிட்டு அனுமானிக்க இயலவில்லை. ஆனால் ஒன்று, இவர் காலத்தில் இந்து தர்மம் மட்டுமல்ல, இஸ்லாமிய தர்மமும் இருந்திருக்கிறது.
நபிகள் நாயகம் இவருக்கு தரிசனம் தந்திருக்கிறார் என்பதும், இவரைப் பற்றி அறியமுற்படும்போது தெரியவருகிறது. ஆயினும், அதில் எந்த அளவு உண்மை இருக்கமுடியும் என்று கேட்டு அதை ஆராய்வதை விட, அதை நம்பி இன்புறுவது மனதை விசாலமாக்குகிறது.
நாகப்பட்டினத்தில் வாழ்ந்து இறுதியில், மதுரை அழகர் கோயிலில் சித்தியடைந்ததாக காணப்படும் யாக்கோபு சித்தரின் வரலாறு, சித்தர்கள் வரலாற்றிலேயே ஒரு தனித்தன்மை உடையதாகும்.
மனிதர்கள் தங்கள் வாழ்வில் பின்பற்றும் ஆன்மிக நெறிமுறைகளுக்கும் சித்தபுருஷர்கள் பின்பற்றும் ஆன்மிக நெறிமுறைகளுக்கும் நிறையவே வேறுபாடுகள் இருந்து வந்திருக்கின்றன. நமது நெறி முறைகள், விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் கொண்டவை. கல்வி, கேள்விகளில் ஒருவர் மேதையாக வேண்டும் என்றால், முதலில் பள்ளிக்குச் சென்று ஒன்றாம் வகுப்பில் தொடங்கி படிப்படியாக தேர்ச்சி பெற்று, பின் கல்லூரி, பல்கலைக் கழகம் என்று உச்சிக்குச் செல்வது போன்றது நமது ஆன்மிக நெறி.
சித்தர்களின் நெறிமுறை இப்படிப்பட்டதே அல்ல. பிறக்கும்போதே ஒரு பல்கலைக்கழகப் பட்டதாரி அளவு ஞானமுடன் பிறந்துவிட்ட சித்த புருஷர்கள் பலர் உண்டு. அப்படி இல்லாவிட்டாலும் கூட ஒன்று, இரண்டு என்று படிப்படியாகச் செல்வது போலல்லாமல், ஒரே நாளில் குருநாதரின் நேத்ரதீட்சையால் முழுமையான ஞானம் பெற்றவர்கள் பலர் உண்டு.
அப்படிப்பட்டவர்களுள் ஒருவர்தான்_ பின்னாளில் யாக்கோபு என்று அழைக்கப்பட்ட ராமதேவர்.
நாகப்பட்டினத்தில் சுற்றிவந்த ராமதேவருக்கு, தான் ஒரு கூட்டுப் புழுபோல இருந்துவிடக் கூடாது என்ற எண்ணம் தோன்றிட, அவர் பல இடங்களுக்கும் செல்லத் தொடங்கினார்.
இந்த உலகம் முழுவதும் சென்று வர வேண்டும்; எல்லா இடங்களிலும் மனித வாழ்வு எப்படி உள்ளது என்று பார்த்து விடவேண்டும்.; எங்கே நல்லது இருந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு பொதுமையாளன் ஆக வேண்டும் என்பது ராமதேவனின் எண்ணம்.
அந்த வகையில், காசிக்குச் சென்று கங்கையில் நீராடிவிட்டுத் திரும்பும்போது, சட்டநாதர் என்னும் சிவமூர்த்தியின் லிங்க ரூபம் கண்ணில்பட்டது.
சிவமூர்த்தியின் ஆங்கார சொரூபத்தில் தோன்றிய சரபேஸ்வரத்தின் அம்சம் கொண்டது அந்த லிங்கம். சங்கநாதன் என்று விஷ்ணுவையும், சட்டநாதன் என்று சிவத்தையும் சூட்சுமப் பெயரில் குறிப்பிடுவார்கள்.
சட்டநாத ரூபம் அகந்தையை அடக்கவல்லது. பணிவைத் தந்து பரந்த நோக்கை உருவாக்குவது. இது தெரிந்தோ தெரியாமலோ ராமதேவர் அதன்மேல் பக்தி கொண்டு, அப்படியே பூசனையும் புரிந்தார். அன்று இரவு, அவர் கனவில் ‘இந்த கங்கைக் கரையை விட உனது ஊரான நாகப்பட்டின கடற்கரையில் நானிருக்க விரும்புகிறேன்’ என்று அந்த சட்டநாதர் கூறிட, ராமதேவரும் மிக மகிழ்ந்து, அதை அங்கிருந்து நாகப்பட்டினம் கொண்டு வந்து ஸ்தாபித்தார்.
இந்த சட்டநாதர் மிக விசேஷமானவர். ஓடும் நதிக்கரையில் தோன்றி, அது கூடும் கடலிடம் வந்து சேர்ந்த இவருடைய பின்புலத்தில் பல சூட்சுமங்கள் உள்ளன.
ராமதேவர் வழிபட்ட சட்டநாதர், ராமதேவருக்கு பல சித்திகளை அந்தக் கடல்போலவே வாரி வழங்கினார். இதனால் ராமதேவர் பல சித்துக்களை எளிதில் பெற்றார். அப்படியே உடம்பை வெல்லும் வைத்ய நெறிமுறைகளில் மிகுந்த கவனம் செலுத்தி மூலிகை தேட ஆரம்பித்தார்.
அந்தத் தேடலில் அவருக்கு ஓர் உண்மை புலனானது. அதுதான் பூகோள ஞானம். இந்த மண்தான் உயிர்களுக்கு எல்லாவற்றையும் தருகிறது. காற்றோடும், நீரோடும், ஒளியோடும் கூடி அந்தரம் எழும்பி, இது மனித குலத்துக்கு உணவைத் தருகிறது. அந்த உணவும் இடத்துக்கு இடம் வேறுபடுகிறது. எல்லாவித உணவு வகைகளும் எல்லா இடங்களிலும் விளைந்து விடுவதில்லை.
மலையில் விளையும் தேயிலையும் காபியும் தரையில் பட்டுப் போய் விடுகின்றன. தரையில் விளையும் சில பயிர்களோ மலையில் விளைய மறுக்கின்றன. இடத்துக்கு இடம் பஞ்சபூத கலவையில் மாறுபாடு இருப்பதால் தட்பவெப்பம், மண்சத்து, காற்றில் குளிர், பொழுதுகளில் வெப்பம் என்று எல்லாவற்றிலும் மாறுபாடுகள் உள்ளன. இந்த மாறுபாட்டிற்கு ஏற்பவே தாவரங்கள் வளருகின்றன என்பதைப் புரிந்து கொண்ட ராமதேவர், எங்கே ஒருவர் பிறக்கிறாரோ அங்கே விளையும் பொருள் எதுவாக இருப்பினும் அங்கே பிறந்தவரை அது எதுவும் செய்யாமல், அவருக்கு அது பொருந்தி விடுவதையும் பார்த்தார். அதாவது_ பூகோளமானது, மனித உடம்பையும் தன் வசம் வைத்துக் கொண்டு ஆட்டிவைப்பதையும் உணர்ந்தார். பனிமலையில் பிறந்து வளரும் ஒருவன் உடம்பு, அந்த மலைக்காட்டின் ஈரத்திற்கு ஈடு கொடுப்பதாக உள்ளது. ஆனால் தரையில் வசிப்பவன் அங்கு சென்றால், குளிரால் நடுங்கித் துன்புறுகிறான்.
பூகோளமானது இப்படி மனித உடம்பையும் கட்டுப்படுத்துவதை உணர்ந்தவர், உடம்பில் ஏற்படும் வியாதிகளோடு தனது பூகோள ஞானத்தை பொருத்திப் பார்த்து ஆய்வுகள் செய்தார்.
வெம்மை நோயால் இங்கு ஒருவர் பாதிக்கப்படுகிறார். ஆனால், வெப்பப் பிரதேசமான அரபு நாடுகளில் வாழ்பவர்களை வெப்பம் பெரிதாக பாதிப்பதில்லை. நீர்வளமே இல்லாத அந்த மண்ணில் அவர்களுக்கு நீர்ச்சத்து எதிலிருந்து, எப்படிக் கிட்டுகிறது? என்பதெல்லாம் ராமதேவரின் கேள்விகளாயின.
இதனால் உலகம் முழுக்க சுற்றி வரப் புறப்பட்ட ராமதேவர், மெக்கா நகரின் வறண்ட சூழலிலும் அங்கு பல அற்புத மூலிகைகள் இருக்கக் கண்டார். பூகோள அமைப்பில் அங்கே ஒரு விசையும் இருப்பது புலனானது. பல லட்சம் முகம்மதியர்கள் அது தங்களை கடைத்தேற்றும் இடம் என்று மன ஒருமையோடு வழிபடுவதால் அங்கே அருள் அலைகளும் பரவியிருந்தன.
இதை தன் தவ உடம்பால் உணர்ந்த ராமதேவருக்கு, மெக்காவை விட்டு வர மனமே இல்லாது போயிற்று. அங்கேயே தங்கி தன் ஆய்வுப் பணியை மேற்கொண்ட ராமதேவர், அங்கு நோயால் துன்புற்றவருக்கு தானறிந்த மருத்துவத்தால் அங்குள்ள மூலிகைகளையும் சேர்த்து சிகிச்சையளிக்க... அதனால் பெரிய நிவாரணம் ஏற்பட்டது. இதனால் அங்கே ராமதேவருக்கு பெரிதும் வரவேற்பு கிட்டியது. கூடவே, ஓர் அன்னியன் இங்கு வந்து ஆதிக்கம் செலுத்த முற்படுவதா? என்று எதிர்ப்பும் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இருப்பினும், உண்மையும் சத்தியமும் எவரையும் வெல்லும் என்பதற்கேற்ப, அந்த எதிர்ப்பெல்லாம் காலத்தால் அடங்கிவிட... ராமதேவரும் இஸ்லாமியத்தின் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டார். அங்குள்ளோர் ராமதேவரை யாக்கோபுவாக்கினர். யாக்கோபுவான ராமதேவரும் குர்_ஆன் ஓதிக் கற்றார். தொழுகைகள் புரிந்தார். ஏற்கெனவே சித்த ஞானம் கை கூடி இருந்ததால் மன ஒருமை மிக இலகுவாக ஏற்பட்டதில் நபிகள் நாயகத்தின் ஆன்ம தரிசனமும் யாக்கோபுவுக்குக் கிட்டியதாகக் கூறுவர்.
அதன் எழுச்சியாக, பதினாறு நூல்களை அரபு மொழியிலேயே எழுதியதாகவும் கூறுவர்.
அப்போது, அவரைப்போலவே உலகம் முழுக்க யாத்திரை மேற்கொண்ட போகர், மெக்கா வந்தபோது ராமதேவருக்கு தரிசனம் தந்தார். ‘தாய் மண்ணை மறந்து இங்கே இப்படி இருப்பது சரியா? எதை அறிய வந்தாயோ அதை அறிந்த நீ, அதை இங்குள்ளவர்களுக்கு மட்டும் அளித்தால் போதுமா? உலகிற்கு அதை பொதுவாக்க வேண்டாமா?’ என்று போகர் கேட்க, யாக்கோபுவான ராமதேவருக்கு ஒரு விழிப்பு ஏற்பட்டது.
மெக்காவை விட்டு நீங்கிய ராமதேவர், மீண்டும் நாகை வந்து, சட்டநாதரை வணங்கி, தான் மெக்காவில் அறிந்தவற்றை தமிழிலும் எழுதினார்.
அதுவே ‘ராமதேவ வைத்ய சாரம்’ என்ற நூலானது. இதை சிலர் ‘யாக்கோபு சாஸ்திரம்’ என்றும் கூறினர்.
இந்த வைத்ய முறை, மற்ற சித்த வைத்ய முறைகளிலிருந்து பெரிதும் வேறுபட்டிருந்தது.
ரத்தசோகை, இரும்புச்சத்து குறைபாடு, வெம்மை நோய்கள் போன்றவற்றுக்கு இவரது வைத்தியம் பெரிதும் கை கொடுத்தது. பின்னாளில் ராமதேவருக்கு பல சித்த புருஷர்களின் தரிசனம் கிட்டியது. அவர்களில் காலாங்கி நாதரும் ஒருவர்.
காலாங்கி நாதர் உபதேசம் ராமதேவரான யாக்கோபுவை தவத்தில் மூழ்க வைத்தது. நெடுங்காலம் தவமியற்றிய ராமதேவருக்கு மேலும் பல சித்திகள் ஏற்பட்டன.
திரும்பவும் மூலிகை தேடிப் புறப்பட்ட ராமதேவரால், பொதிகைக்கும், சீனத்துக்கும் ஆகாயமார்க்கமாக நினைத்தவுடன் சென்று வர முடிந்தது. பின் கொல்லிமலை, தென்கயிலாயம் எனப்படும் சதுரகிரித்தலம் என பல தலங்களுக்குச் சென்று அங்கே தங்கி ஆய்வு செய்தவர், இறுதியாக மதுரை அழகர் மலைக்கு வந்து அங்கேயே தங்கி விட்டார்.
அழகர்மலை, சிலகாலம் சமணர்கள் ஆதிக்கத்தில் இருந்தது. இங்கே நூபுர கங்கை தீர்த்தம் உள்ளது. இதில் நீராட இந்திரன் முதலான தேவர்கள் வருவர் என்பது புராண வழிச் செய்தியாகும்.
இந்த மலையின் பின்புறத்தில் சைவம், வைணவம், சமணம் முதலிய பலவித ஆன்மிக நெறிகளின் சங்கமம் உள்ளது. எவ்வளவோ மலைத்தலங்கள் இருப்பினும் அழகர் மலைத் தலம் அவைகளில் பெரிதும் மாறுபட்டு, தட்பவெப்ப சூழலில் உலகின் எல்லாவித தட்பவெப்ப நிலை அமைப்பையும் தன்னகத்தே கொண்டிருப்பது. வெப்பம், குளிர், வசந்தம், வேனில் என்று எல்லாவித பருவங்களிலும் ஒரு சமமான, மிகையிலாத்தன்மை உடையது என்பர். எனவே ராமதேவராகிய யாக்கோபு சித்தர், தன் அந்திமக்காலத்தை இங்கேயே கழித்து இறுதியாக இங்கேயே சமாதியானார் என்பர்!
 
  Today, there have been 19 visitors (147 hits) on this page! View Full Moon Day Time table  
 
மனதைத் திறந்து வைத்திரு. நீ அறிந்ததைவிட பெரிய விடயம் ஒன்று இங்கு நடந்துகொண்டிருக்கிறது This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free